இது தொடர்பில் குறித்த சங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள N/04/2025 ஆம் இலக்க இணைந்த சேவை உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த இடமாற்றம் 2026 சுற்றறிக்கையின்படி உத்தியோகத்தர்களுக்கிடையில் பக்கச்சார்பான இடமாற்ற ஏற்பாடுகள் முன்வைக்கபட்டுள்ளன. இதனால் நிர்வாக ரீதியான முறைகேடுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
தற்போதுவரையில் தமது சேவைக்காலத்தில் ஒருமுறைகூட வெளி மாவட்டங்களில் சேவை புரியாத 60 வதற்க்கும் அதிகமான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் காணப்படுகின்றனர்.
எனினும் மேற்படி “குறிப்பு 7” இல் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தமது சேவைக்காலத்தில் 12 வருடங்கள் சுழற்சிமுறையில் 5 வருடங்கள், 3 வருடங்கள் என்னும் அடிப்படையில் சேவையாற்ற வேண்டிய தேவை அவசியமாகின்றது என அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் செயற்பாட்டின் மூலம், நிர்வாக உயரதிகாரிகளின் உறவினர்கள், சுற்றத்தார்கள், நெருக்கமான உத்தியோகத்தர்கள், மற்றும் உயரதிகாரிகளின் ஊழல்களுக்குத் துணைபோகும் உத்தியோகத்தர்கள் தனது சேவைக்காலத்தில் ஒருமுறை கூட சொந்த மாவட்டம் தவிர்ந்த பிற மாவட்டங்களில் சேவைபுரிந்துவராத நிலையில் தமது சேவையைப் பிறமாவட்டங்களில் மேற்கொண்டிருப்போர் மீளவும் வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட நிர்ப்பந்திக்கப்படுவர்.
உயர்நிலைச் சம்பளங்களையும் விடுதிவசதிகளையும் கொண்டிருக்காத மற்றும் உயரதிகாரிகளினிடத்தில் செல்வாக்குமற்ற சாதாரண நிலையிலுள்ள பல உத்தியோகத்தர்கள் தாம் பெறுகின்ற சம்பளத்தில் பாதியை வீட்டு வாடகைக்கு அல்லது போக்குவரத்திற்குச் செலவுசெய்து, தொழில்புரியும் வாழ்நாளில் பாதிக்காலத்தினை இக்கட்டான மனநிலையுடனான சிரமமான வாழ்க்கை முறையொன்றிற்குள் தள்ளப்படுவர்.
பொருளாதாரத்தில் மட்டுமல்லாமல் வாழ்க்கைக்கும் தொழிலுக்குமான சமநிலையைப் பேணமுடியாத இவ்வுத்தியோகத்தர்கள் உளச்சுகாதாரத்திலும், உடல்நலனிலும் நலிவுற்றுச் சுகாதார ரீதியாக தமக்கான ஆயட்காலத்தினை இழப்பர்.
அரச நிர்வாகத்தில் நிலைநாட்டப்படவேண்டிய நீதி மறுக்கப்படுவதும் அதற்கான மாற்று வழியாக லஞ்சமும், ஊழலும் நிறைந்த அரசசேவை ஒன்று தாபிக்கப்படுவதற்கும் இது வழிவகைசெய்யும்.
அறிவியல் ரீதியற்றதும் ஆய்வுக்கு உட்படுத்தப்படாததுமாகியமுறையில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை பற்றி உரிய தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டிருந்தும் அதுதொடர்பில் பாராமுகமாகச் செயற்பட்டுவருகின்றனர். எனவே இந்த விடயத்தில் நீதியான தீர்வு கிடைக்கவேண்டும் என்றுள்ளது.