எதிர்கால சந்ததியினரை இயந்திரமயப்படுத்தும் வகையிலான கல்வி சீர்திருத்தங்கள் சிறந்தவையல்ல - ஐக்கிய மக்கள் சக்தி



கல்வி சீர்திருத்தத்தினை நிகழ்காலத்துக்கு தேவையான வகையில் முன்னெடுப்பதில் தவறில்லை. ஆனால் அந்த சீர்திருத்தங்கள் எவ்வாறு இடம்பெற வேண்டும் என்பது தொடர்பில் நாம் அவதானம் செலுத்த வேண்டும். எதிர்கால சந்ததியினரை இயந்திரமயப்படுத்தும் வகையிலான கல்வி சீர்திருத்தங்கள் சிறந்தவையல்ல என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

கண்டியில் வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கல்வி சீர்திருத்தத்தினை நிகழ்காலத்துக்கு தேவையான வகையில் முன்னெடுப்பதில் தவறில்லை. ஆனால் அந்த சீர்திருத்தங்கள் எவ்வாறு இடம்பெற வேண்டும் என்பது தொடர்பில் நாம் அவதானம் செலுத்த வேண்டும்.

கல்வி சீர்திருத்தம் என்ற பெயரில் நாட்டில் மாணவர்களின் மனநிலையை மாற்றுவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாகவே தற்போது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பில் அரசாங்கம் யாருடன் கலந்தாலோசித்திருக்கிறது? இதற்காக அரசாங்கம் முன்வைக்கும் ஆதாரம் என்ன? கல்வி சீர்திருத்தத்துக்கான அறிக்கையை அரசாங்கம் தயாரித்திருக்கிறது என்றால் அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியிருக்கின்றார். இதற்கு அரசாங்கத்தின் தரப்பில் வழங்கப்படும் பதில் என்ன?

அரசாங்கம் இது தொடர்பில் எந்தவொரு ஆவணத்தையும் தயாரிக்கவில்லை. கலந்துரையாடலுக்கான பேசு பொருளாக மாத்திரமே இது காணப்படுகிறது.

அவ்வாறெனில் இது முழுமையாக மக்களை ஏமாற்றுவதற்காக முன்வைக்கப்படும் யோசனையாகும். இவ்வாண்டுக்குள் இந்த சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய ஸ்திரமாகக் கூறுகின்றார்.

அடுத்த ஆண்டு ஆரம்பமாகும் போது சில வகுப்புக்களுக்கான பாடப்பரப்புக்களில் மாற்றங்கள் ஏற்படும் என அவர் கூறுகின்றனர். அவ்வாறெனில் இந்த மாற்றம் தொடர்பில் எவ்வாறு தீர்மானங்கள் எடுக்கப்பட போகின்றன?

இந்த விடயம் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது எவ்வாறு அவை நடைமுறைப்படுத்தப்படும்? கலந்துரையாடல்களில் இறுதி தீர்மானம் எடுக்கப்படாத நிலையில், அவற்றை நடைமுறைப்படுத்த முற்படுவது சிறந்த தீர்மானமல்ல.

வரலாறு மற்றும் அழகியல் பாடங்களை கட்டாய பாடங்கள் என்று இல்லாமல், விருப்பத்தெரிவில் உள்ளடக்கி வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கான தீர்மானத்தை அரசாங்கம் எடுத்துள்ளது. மதத் தலைவர்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டிருக்கின்றனர்.

இவற்றுக்கு அப்பால் அரசாங்கம் இந்த தீர்மானத்தை நிறைவேற்ற தீர்மானிக்குமாயின் அது சில அரச சார்பற்ற நிறுவனங்களின் தேவைக்காகவேயாகும் என்றார்.