அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதை தடுப்பதற்கு சகல முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன - சுகாதார அமைச்சர்



அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை திங்கட்கிழமை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ள வேலை நிறுத்த போராட்டத்தினை தடுப்பதற்கு சுகாதார அமைச்சின் சார்பில் சகல முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன. இனங்காணப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வு வழங்கப்படும். எனவே பொது மக்களுக்கு தடையற்ற மருத்துவ சேவையை வழங்குவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

சனிக்கிழமை (09) இடம்பெற்ற இலங்கை அவசர மருத்துவ நிபுணர்கள் கல்லூரியின் வருடாந்த ஆய்வு மாநாட்டில் பங்கேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்துக்கு வேலை நிறுத்த போராட்டத்துக்குச் செல்வதற்கான காரணமொன்று இருக்கும் என நான் நினைக்கவில்லை. அவர்களுடன் நான் கலந்துரையாடினேன். சில இடங்களிலுள்ள பிரச்சினைகள் இனங்காணப்பட்டுள்ளன. தற்போது சேவையாற்றும் வைத்தியர்கள் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களுடன் இணைக்கப்பாட்டுடனேயே பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். அதற்கு நாம் நியாயமான தீர்வொன்றை வழங்குவோம்.

மக்களுக்கு சிறந்த சேவை வழங்க வேண்டும் என்பதே அனைவரதும் நோக்கமாகும். எவ்வாறிருப்பினும் கடும் நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே நாம் அந்த சேவையை ஆற்றிக் கொண்டிருக்கின்றோம். கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட நெருக்கடிகளுக்கு தற்போது படிப்படியாக தீர்வினை வழங்கிக் கொண்டிருக்கின்றோம். எனவே அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடாது என எதிர்பார்க்கின்றோம்.

கடந்த ஆட்சிக் காலங்களில் செயற்பட்டதைப் போன்றே தற்போதும் சில அதிகாரிகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு நியாயமானதல்ல. சுகாதார அமைச்சின் அனைத்து அதிகாரிகளும் ஒரே இலக்குடனேயே பணியாற்றுகின்றனர். சுகாதாரத்துறையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு என்ன காரணம் என்பதை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நன்கு அறியும்.

தட்டுப்பாடு நிலவும் மருந்துகளை விரைவாக கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. திங்களன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படும் வேலை நிறுத்த போராட்டத்தினை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் சுகாதார அமைச்சின் சார்பில் நாம் முன்னெடுத்திருக்கின்றோம். எமது முயற்சி வெற்றியளிக்கும் என்று நம்புகின்றோம் என்றார்.