மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்ட 13 இளைஞர்களுக்கு விளக்கமறியல்


மஹரகம - பன்னிபிட்டிய ஹைலெவல் வீதியில் பணத்துக்காக மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 13இளைஞர்களை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொடை நீதவான் நீதிமன்றம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) உத்தரவிட்டுள்ளது.

மஹரகம, ஹோமாகம, மத்தேகொடை, கொட்டாவை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இளைஞர்கள் சிலர் மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டுள்ளதாக மஹரகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் 13 இளைஞர்களும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இளைஞர்களிடமிருந்து 11 மோட்டார் சைக்கிள்களும் ஒரு முச்சக்கரவண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் நுகேகொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.