ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த 1500 பட்டதாரிகளுக்கு இன்னும் நியமனங்கள் வழங்கப்படவில்லை - சஜித் பிரேமதாச


மேல் மாகாணத்தில் ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த 1500 பட்டதாரிகள் காணப்படுகின்றனர். இவர்களை மேல் மாகாண ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்து கொள்ள முடியும். அவ்வாறு வாய்ப்பிருந்தும் அரசாங்கம் இவ்விடயத்தில் அவர்களுக்கு அநீதியிழைப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேல் மாகாண ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த பட்டதாரிகளால் நேற்று புதன்கிழமை (17) கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த இந்த 1500 பட்டதாரிகள் விவகாரத்தில் அரசாங்கம் அநீதியிழைத்துள்ளது. வெற்றிடங்கள் காணப்படுகின்ற போதிலும், நியமனங்களை வழங்குவதில் அரசாங்கம் இழுத்தடிப்புக்களை செய்கிறது. உண்மையில் இவர்களின் நியமனம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலின் செல்லுபடியாகும் காலம் 2025 டிசம்பர் 31 ஆம் திகதியோடு முடிவுக்கு வருகின்றது.

எனவே இந்த வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடியாகும் காலத்தை நீடித்து, இத்தரப்பினரை உடனடியாக ஆட்சேர்ப்பு செய்து கொள்ளுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறேன். தொடர்ச்சியாக அரசாங்கம் இந்த ஆட்சேர்ப்பை காலம் தாழ்த்தி வருகின்றது. பட்டதாரிகளுக்கு வழங்க வேண்டிய தகுதியான இடத்தை வழங்காது இழுத்தடிக்கும் வேலையைச் செய்து வருகிறது.

நாட்டில் 35,000 வேலையில்லாப் பட்டதாரிகள் காணப்படுகின்றனர். ஜனாதிபதி கூறியது போல், ஆசிரியர் போட்டிப் பரீட்சையிலும் இவர்கள் சித்தியடைந்துள்ளனர். பட்டதாரி ஆசிரியர் நியமனங்களை வழங்க அரசாங்கம் தயக்கம் காட்டி வருகிறது. தற்போதைய அரசாங்கம் பட்டதாரிகள் விடயத்தில் ஏன் இந்த விதமாக எதிர்க்கும் நிலைப்பாட்டில் இருந்து வருகிறது என்பதை புரிந்துகொள்ள முடியாதுள்ளது.

வர்த்தமானி அறிவித்தல் இரத்தாகும் வரை அரசாங்கம் இவ்வாறு காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறது. இந்த தொழில்களை வழங்கும் விடயத்தில் ஏற்படும் தாமதம் இந்த பட்டதாரிகளின் மனித மற்றும் அடிப்படை உரிமைகளை மீறும் செயல்களாகும். இத்தரப்பினருக்கு நீதியையும் நியாயத்தையும் நிலைநாட்ட வேண்டும். அதுவரை ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள் கூட்டணியும் இவர்களுக்காக முன்நிற்கும் என்றார்.