தெல்தெனிய - விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற பேஸ்புக் களியாட்ட நிகழ்வொன்றில் போதைப்பொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட 28 பேரை பிணையில் விடுதலை செய்யுமாறு தெல்தெனிய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெல்தெனிய - விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த சனிக்கிழமை (13) அதிகாலை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் போதைப்பொருட்களுடன் 24 இளைஞர்களும் 4 யுவதிகளும் கைது செய்யப்பட்டனர்.
கண்டி, முல்லேரியா, ஹட்டன், பிலகல, அத்துருகிரிய, கொடகெதர, ஹோமாகம, தொம்பே, எம்பிலிப்பிட்டிய, திருகோணமலை மற்றும் ஜா-எல ஆகிய பகுதிகளை சேர்ந்த 18 முதல் 31 வயதுக்குட்பட்ட இளைஞர்களும் 21 முதல் 26 வயதுக்குட்பட்ட யுவதிகளுமே கைது செய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து, 4134 மில்லிகிராம் ஐஸ், 1875 மில்லிகிராம் ஹேஷ் போதைப்பொருள், 2769 மில்லிகிராம் குஷ் போதைப்பொருள், 390 மில்லிகிராம் கொக்கேயின், 13 போதைமாத்திரைகள் மற்றும் 12 சட்டவிரோத சிகரட்டுகள் என்பன கைப்பற்றப்பட்டன.
இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட 28 பேரும் தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







.jpeg)
.jpeg)




