
இலங்கையில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக நாடு முழுவதும் 36 முக்கிய நீர்த்தேக்கங்களும் 50க்கும் மேற்பட்ட நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது நிரம்பி வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் தகவலின்படி, அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒன்பது முக்கிய நீர்த்தேக்கங்களில் மூன்றும், அனுராதபுரம் மாவட்டத்தில் பத்து நீர்த்தேக்கங்களில் ஒன்பதும், பதுளை மாவட்டத்தில் 7 நீர்த்தேக்கங்களில் நான்கும், மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு நீர்த்தேக்கங்களில் இரண்டும் தற்போது நிரம்பி வழிகின்றன.
மேலதிகமாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள 10 முக்கிய நீர்த்தேக்கங்களில் ஒன்றினதும், கண்டி மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய நீர்த்தேக்கங்களினதும், குருநாகல் மாவட்டத்தில் உள்ள 10 முக்கிய நீர்த்தேக்கங்களில் மூன்றினதும், மொனராகலை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய நீர்த்தேக்கங்களில் இரண்டினும் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதேபோல், பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள நான்கு முக்கிய நீர்த்தேக்கங்களில் இரண்டிலிருந்தும், புத்தளம் மாவட்டத்தில் உள்ள இரண்டு முக்கிய நீர்த்தேக்கங்களிலிருந்தும், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஐந்து முக்கிய நீர்த்தேக்கங்களில் நான்கிலிருந்தும், வவுனியா மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கிய நீர்த்தேக்கத்திலிருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், தற்போது வெளியேற்றப்படும் நீரின் அளவு மிகக் குறைவாகவே உள்ளது என்றும், இருப்பினும், எதிர்கால மழைப்பொழிவைப் பொறுத்து வெளியேற்றப்படும் நீரின் அளவு மாறுபடலாம்.
எனவே, குறித்தநீர்த்தேக்கங்களின் கீழ் பகுதிகளில் வசிப்பவர்கள், அந்தந்த நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் வெளியேற்றம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்கு விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.







.jpeg)
.jpeg)
.jpg)


