இலங்கையின் சமீப வரலாற்றில் மிகவும் தீவிரமான மற்றும் அழிவுகரமான சூறாவளிகளில் ஒன்றாகக் கருதப்படும் ‘டித்வா’ சூறாவளியால், நாட்டின் 25 மாவட்டங்களிலும் 5 இலட்சம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 20 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக வாழ்வாதாரங்கள், அத்தியாவசிய சேவைகள் மற்றும் தேசிய பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த GRADE அறிக்கை, அவசர நிவாரண நடவடிக்கைகள், மீட்பு திட்டமிடல் மற்றும் நீண்டகால பேரிடர் அபாயக் குறைப்பு நடவடிக்கைகளுக்கு வழிகாட்டும் முக்கிய தகவல்களை வழங்குகிறது.
இது உலக வங்கியின் விரைவான, தொலைநிலை மற்றும் மாதிரி அடிப்படையிலான மதிப்பீட்டு முறையை பயன்படுத்தி, கட்டடங்கள், விவசாயம் மற்றும் உட்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட நேரடி பொருளாதார சேதங்களை கணக்கிட்டுள்ளது.
எனினும், வருமான இழப்புகள், உற்பத்தி இழப்புகள் அல்லது முழுமையான மீள் கட்டுமான செலவுகள் இதில் சேர்க்கப்படவில்லை.
மத்திய மாகாணம் கடுமையாக பாதிப்பு
மத்திய மாகாணமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கண்டி மாவட்டத்தில் மட்டும் சுமார் 689 மில்லியன் அமெரிக்க டொலர் சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் வெள்ளப்பெருக்குகளும், ஓரளவு மண்சரிவுகளுமாகும்.
உட்கட்டமைப்புகளுக்கு பெரும் சேதம்
பாதைகள், பாலங்கள், ரயில் பாதைகள் மற்றும் நீர்வழங்கல் வலையமைப்புகள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளுக்கே அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 1.735 பில்லியன் அமெரிக்க டொலர், இது மொத்த சேதத்தின் 42 சதவீதம் ஆகும். இதனால் போக்குவரத்து, சந்தை அணுகல் மற்றும் அடிப்படை சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
வீடுகள், விவசாயம், கல்வி – கடுமையான தாக்கம்
வீடுகள் மற்றும் உட்கட்டமைப்புக்கள் : சுமார் 985 மில்லியன் அமெரிக்க டொலர் சேதம்
விவசாயம்: நெல், காய்கறி பயிர்கள், கால்நடை, உள்நாட்டு மீன்பிடி உள்ளிட்ட துறைகளில் சுமார் 814 மில்லியன் டொலர் சேதம்
பாடசாலைகள், வைத்தியசாலைகள், தொழிற்சாலைகள் போன்ற குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்கு சுமார் 562 மில்லியன் டொலர் சேதம் ஏற்பட்டுள்ளது.
இவை கல்வி, சுகாதாரம் மற்றும் உள்ளூர் பொருளாதார நடவடிக்கைகளை பெரிதும் பாதித்துள்ளன.
பாதுகாப்பற்ற சமூகங்களுக்கு அதிக அபாயம்
வறுமை, அடிப்படை சேவைகளின் குறைவு மற்றும் காலநிலை அபாயங்களுக்கு உட்பட்ட நிலை போன்ற முன்கூட்டிய சமூக-பொருளாதார பலவீனங்கள், இந்த சூறாவளியினால் தாக்கத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பெண்கள் தலைமைத்துவ குடும்பங்கள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலக வங்கியின் இலங்கை மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கான நிர்வாகி கேவோர்க் சர்க்ஸ்யான் இதுகுறித்து கூறுகையில்,
“பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நீண்டகால சமூகப் பலவீனங்கள் மக்கள் அதிக ஆபத்தில் தள்ளப்பட்டிருப்பதை வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் பல குடும்பங்கள் பெண்கள் அல்லது முதியவர்கள் தலைமையிலானவையாக உள்ளன. இதனால் சமூக மையமான மீட்பு நடவடிக்கைகள் அவசியமாகின்றன” என தெரிவித்துள்ளார்.
உலக வங்கியின் அவசர உதவி
சூறாவளிக்குப் பின்னர் உடனடியாக உலக வங்கி குழுமம், ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களின் கீழ் 120 மில்லியன் அமெரிக்க டொலர் வரை நிதியை திரட்டி, சுகாதாரம், குடிநீர், கல்வி, விவசாயம் மற்றும் போக்குவரத்து சேவைகளை மீட்டெடுக்க உதவி வழங்கியுள்ளது.
மீட்பு செலவுகள் மேலும் அதிகமாகும்
இந்த 4.1 பில்லியன் டொலர் மதிப்பீட்டை விட, முழுமையான மீட்பு மற்றும் மீள் கட்டுமான தேவைகள் இன்னும் அதிகமாக இருக்கும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
மனிதாபிமான தேவைகள், வாழ்வாதார மீட்பு, காலநிலைத் தாங்கும் வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் முழுமையான மீட்பு திட்டங்கள் அவசியம் என்றும் அறிக்கை வலியுறுத்துகிறது.
இந்த மதிப்பீட்டினை மேற்கொள்ள உலக வங்கி, இலங்கை அரசின் வெளிநாட்டு வளத் துறை, நிதியமைச்சகம், தேசிய திட்டமிடல் துறை மற்றும் பேரிடர் முகாமைத்துவ மையம் ஆகியவற்றுடன் நெருங்கிய ஒத்துழைப்புடன் செயல்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது







.jpg)

.webp)



