பொது இடத்தில் வெற்றிலை மென்று துப்பிய மூவருக்கு 7000 ரூபா தண்டம்


புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு சந்தை வளாகத்தில், மக்கள் நடமாடும் பொது இடத்தில் வெற்றிலை மென்று எச்சில் உமிழ்ந்து துப்பிய மூவருக்கு 7000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு சந்தையில் பொது இடத்தில் வெற்றிலை மென்று எச்சில் உமிழ்ந்த மீன் வியாபாரம் செய்த ஒருவரும், பொது மக்களான இருவரும் அடங்கலாக மூவருக்கு எதிராக, புதுக்குடியிருப்பு பொது சுகாதார பரிசோதகரால் வெள்ளிக்கிழமை (19) மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. குறித்த வழக்குகள் இன்றையதினமே விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.

விசாரணையின் முடிவில், குற்றம் சாட்டப்பட்ட மூவரையும் குற்றவாளிகளாக இனங்கண்ட முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம், மீன் வியாபாரம் செய்த ஒருவருக்கு 5000 ரூபா தண்டமும், ஏனைய இருவருக்கு தலா 1000 ரூபா வீதமும் விதித்தது. இதன் மூலம் மொத்தமாக 7000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் பட்சத்தில், குறிப்பிட்ட காலம் சமூக சேவை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் எனவும் நீதிமன்றம் எச்சரிக்கை செய்து தீர்ப்பளித்துள்ளது.