சாரதியை கத்தியால் குத்தி காரை கொள்ளையிட்டுச் சென்ற கும்பல் கைது



கொழும்பு - கஹதுடுவ பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) சாரதி ஒருவரை கத்தியால் குத்தி காரை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கஹதுடுவ பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை (18) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,
சொகுசு கார் ஒன்றின் சாரதி ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) பொல்கஸ்சோவிட்ட பிரதேசத்தில் காரை நிறுத்தி உறங்கியுள்ள நிலையில், அப்பகுதிக்கு வந்த இனந்தெரியாத நபரொருவர் தனது மனைவி சுகயீனமுற்று இருப்பதாகவும் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்ல உதவுமாறும் சாரதியிடம் கோரியுள்ளார்.

இதற்கு சம்மதித்த சாரதி அந்நபரை காரில் ஏற்றிச் சென்றுள்ள நிலையில் வழியில் அந்நபர் காரை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு திருப்புமாறு கோரியுள்ளார்.

சந்தேகமடைந்த கார் சாரதி உடனடியாக பொலிஸ் நிலையத்தை நோக்கி காரை செலுத்த முயன்ற போது, அந்நபர் சாரதியை கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து அந்நபர் மேலும் சிலருடன் இணைந்து கார் சாரதியை காரிலிருந்து வெளியே வீசி காரை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கொள்ளையிடப்பட்ட சொகுசு கார் பிலியந்தலை, தும்போவில பிரதேசத்தில் வைத்து அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் இந்த கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தெஹிவளை, பொரலஸ்கமுவ மற்றும் பொல்கஸ்சோவிட்ட ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 10300 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹதுடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.