எரிவாயு விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது ; ஜனவரி மாதம் எரிவாயு கப்பல் நாட்டை வந்தடையும் - விஜித ஹேரத் !



எரிவாயு விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாதென்றும் புதிய நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதால் ஜனவரி மாதம் 05 ஆம் திகதி, முதலாவது எரிவாயு கப்பல் நாட்டை வந்தடையும் என்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 இயற்கை அனர்த்த நிலை காரணமாக அடுத்த ஆண்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்றும் எரிவாயு விநியோகத்தில் பாதிப்புகள் வருமெனவும் எதிர்க்கட்சியினர் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.மக்களை அச்சத்திற்குள்ளாக்குவதே இவர்களது நோக்கம் என்பதை சபையில் சுட்டிக்காட்டிய அமைச்சர், இது மிகவும் கீழ்த்தரமான செயற்பாடு என்றும் குறுகிய அரசியல் நோக்கத்துக்காக பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமான நிலையில் உள்ளதாகவும் வீழ்ந்தாலும் சிறந்த முறையில் மீண்டெழுவோம் என்றும் குறிப்பிட்ட அவர்,அதற்கான பலம் அரசாங்கத்திற்கு உள்ளதாகவும் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நாட்டின் தற்போதைய அனர்த்த சூழ்நிலை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில்,உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்;

எரிவாயு விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.ஓமான் நிறுவனத்தை விட 15 டொலர்கள் குறைவான விலைக்கு புதிய நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.அனர்த்த நிலைமையிலிருந்து நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்கு அரச நிர்வாகம் சிறந்த முறையில் செயற்பட்டுள்ளது. நவம்பர் 27 ஆம் திகதி ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால் நாடு மிக மோசமாக பாதிக்கப்பட்டது.நவம்பர் 28 ஆம் திகதி முழு நாட்டுக்குமான அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பதற்கு முப்படையினரும்,பொலிஸாரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்கள்.

நவம்பர் 28 ஆம் திகதி பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில், இராஜதந்திரிகள் அழைக்கப்பட்டு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

இந்த பேச்சு வார்த்தையில் இந்தியாவிலுள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானிகர், நிகழ்நிலை முறையில் கலந்துரையாடலில் பங்கேற்றார். அனர்த்த நிலையில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சர்வதேசத்திடம் நாம் வலியுறுத்தினோம்.அரசாங்கம் என்ற வகையில் அனர்த்த நிலைமையை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்துள்ளோம்.

அனர்த்த நிலைமை தீவிரமடைந்து ஆறு மணித்தியாலத்துக்குள், இந்திய அரசாங்கம் மீட்பு நடவடிக்கைகளுக்காக இரண்டு ஹெலிகொப்டர்களையும், மீட்புப் பணியாளர்களையும் அனுப்பியது.

அதேபோன்று பாகிஸ்தான் அரசாங்கமும் ஹெலிகொப்டரையும், நிவாரணப் பொருட்களையும் வழங்கியது. 24 மணித்தியாலத்துக்குள் பெருமளவான சர்வதேச நாடுகள் நிவாரணங்களை வழங்கி ஒத்துழைப்பு வழங்கின.அந்த வகையில் அரசாங்கத்தின் சார்பில்,உலக நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் இலங்கை விவகாரத்தில் இணக்கமாகவே செயற்பட்டன . இப்போதும் அவ்வாறே செயற்படுகின்றன.அதேபோன்று உலக நாடுகளின் தலைவர்கள் இலங்கையின் அனர்த்த நிலைமை தொடர்பில் அனுதாபங்களைத் தெரிவித்தார்கள்.அனைத்து நிலைமையில் இலங்கை தனிமைப்படவில்லை என உலக நாடுகள் நம்பிக்கையளித்தன. அதேபோன்று சர்வதேச நிதி நிறுவனங்களும் இலங்கைக்கு நிதி மற்றும் ஏனைய நிவாரணங்களை வழங்கியுள்ளன.தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான சிவில் அமைப்புக்களும், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள். மக்களும் தனிப்பட்ட முறையில் ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளார்கள்.அனர்த்த நிலைமையின் போது இலங்கையில் பல இலட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இருந்தார்கள். எனினும் அவர்களில் ஒருவருக்குக் கூட எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. நாம் அவர்களைத் பாதுகாத்தோம்.இது நாட்டுக்கு கிடைத்த பாரியதொரு வெற்றியாகும்.அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணமளிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த பேரிடரினால் முழு நாடும் பாதிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் நிவாரணம் வழங்கலில் குறைபாடுகள் காணப்படலாம். அவற்றை ஆராய்ந்து தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர அதனை விடுத்து அதில் அரசியல் செய்யக் கூடாது.நெருக்கடியான நிலையின் போது எதிர்க்கட்சியினர் ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள்.ஒ ருசிலர் மாத்திரமே போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார்கள். அவர்களை கருத்திற்கொள்ளப் போவதில்லை.

சுற்றுலாத்துறைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட போவதில்லை. டிசம்பர் மாதம் முதல் பகுதியில் மாத்திரம் 93 ஆயிரம் பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளார்கள். இந்த ஆண்டு நாட்டுக்கு 22 இலட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளார்கள் என்பதைக் குறிப்பிட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.