ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சிகளுக்கு பலமான ஆளுமை - உதய கம்மன்பில



முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சிகளுக்கு பலமான ஆளுமையாக உள்ளார்.தற்போதைய இக்கட்டான நிலையில் அவர் பாராளுமன்றத்துக்கு மீண்டும் செல்வது காலத்தின் தேவையாகும் என்று பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசாங்கத்தை புகழ்வது எதிர்க்கட்சிகளின் வேலையில்லை.அதற்கு தான் ஆளுங்கட்சியில் 159 உறுப்பினர்கள் உள்ளார்கள். ஆளுங்கட்சியினர் அரசாங்கத்தின் தவறுகளையும் சரி என்று புகழ்வார்கள்.

ஏனெனில் சரி எது, பிழை எது என்று அவர்களால் தன்னிச்சையாக தீர்மானம் எடுக்க முடியாது. பத்தரமுல்ல கட்சி காரியாலயத்தின் தீர்மானத்தையே அனைவரும் பின்பற்றுவார்கள்.

அரசாங்கர்ரிள் குறைகளை சுட்டிக்காட்டி, மக்களுக்கு அவற்றை எடுத்துரைப்பதே எதிர்க்கட்சிகளின் பொறுப்பு அதனையே நாங்கள் செய்கிறோம்.அரசாங்கம் சிறந்த முறையில் செயற்பட்டால் அதனை நாங்கள் வரவேற்போம்.அனைத்தையும் விமர்சிக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் மனநிலை எமக்கு இல்லை.

பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா பாராளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்வதாகவும், அவ்விடத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்படவுள்ளதாகவும் அரசியல் களத்தில் பேசப்படுகிறது. இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியானது, ஏனெனில் நாங்கள் பிறிதொரு கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடுவதில்லை.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சிகளுக்கு பலமான ஆளுமையாக உள்ளார்.தற்போதைய இக்கட்டான நிலையில் அவர் பாராளுமன்றத்துக்கு மீண்டும் செல்வது காலத்தின் தேவையாகும்.எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரு சிறந்த தலைமைத்துவத்தின் கீழ் பலமாக செயற்பட்டால் மாத்திரமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றார்.