போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யும் விவகாரங்களில் தலையிடும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் விசாரணை !



போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யும் விவகாரங்களில் தலையிடும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யும் விவகாரங்களில் ஒரு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரும் நான்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களும் ஈடுபட்டுள்ளதாக ஊடகங்களில் அண்மையில் வெளியாகி இருந்தன.

இவ்வாறான செயல்களில் ஈடுபடும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர்களே பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவுக்கு தகவல் வழங்கியுள்ளமை கவலைக்குரிய விடயமாகும்.

பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலுக்கமைய, இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் யார் என்பது தொடர்பிலும் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யும் விவகாரங்களில் அவர்கள் எவ்வாறு தலையிடுகிறார்கள் என்பது தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.