
சுற்றுலாவிற்கு மிக பிரசித்தி பெற்ற இடமான எல்ல பகுதியில் பிக்மீ மற்றும் ஊபர் போன்ற சேவைகளில் ஈடுபடும் சாரதிகளை மிரட்டி தாக்கியதாகக் கூறி கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை தொடர்ந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறான சுற்றுலா பகுதிகளில் சேவைகளில் ஈடுபடும் பிக்மீ மற்றும் ஊபர் சாரதிகளை அப்பகுதிகளிலுள்ள உள்ளூர் முச்சக்கர வண்டி சாரதிகள் மிரட்டி தாக்கியதாக எல்ல பொலிஸ் நிலையத்தில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அண்மையில் சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு காணொளி ஒன்றில் பிக்மீ மற்றும் ஊபர் போன்ற சேவைகளில் ஈடுபடும் சாரதிகளை சேவையில் ஈடுப்பட வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை (19) பொலிஸாரின் நடத்தை குறித்து ஒரு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதாகவும் , சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் விசாரணை நடத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அதன் விளைவாக, அந்த முறைப்பாட்டுடன் தொடர்புடைய இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகள் முடிவடையும் வரை உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனைதொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை (21) எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்டபகுதியில் இரு சந்தேகநபர்கள் பிக்மீ மற்றும் ஊபர் சாரதிகளை தாக்க முயற்சி செய்ததுடன், அவரது வாகனத்தை சேதப்படுத்தியுள்ளனர்.
பின்னர் சந்தேக நபர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதினை தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களை கைது செய்ய சிறப்பு நடவடிக்கை ஒன்றை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
மேலும், சுற்றுலா பகுதிகளில் சட்டபூர்வமான போக்குவரத்து சேவைகளை தடை செய்யும் அல்லது வன்முறையில் ஈடுபடும் சந்தேகபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.






.jpeg)

.jpeg)
.jpg)


