
அரச பல்கலைக்கழக விடுதியில் போதுமான பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்படாததால், பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாக அந்த விடுதிகளின் துணை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த விடயம் சம்பந்தமாக அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
விடுதிகளின் பாதுகாப்பு, தனியார் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்பட்டிருந்தாலும் கடந்த ஆறு மாதங்களாக தேவையான எண்ணிக்கையில் பாதுகாப்பு அதிகாரிகள் பணியில் அமர்த்த படவில்லை.
இந்த நிலை காரணமாக மாணவர்கள் மற்றும் விடுதி நிர்வாகிகளும் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுக்கு பல முறை அறிவித்திருந்தாலும் இதுவரை உரிய தீர்வுகள் வழங்கப்படவில்லை.
இதேவேளை அகில இலங்கை விடுதி துணை நிர்வாகிகள் சங்கத்தின் பேச்சாளர் கருத்து தெரிவிக்கையில், நாடு முழுவதும் உள்ள ஏழு அரச பல்கலைக்கழகங்களில் சுமார் 200 வெளிப்புற மற்றும் உட்புற விடுதிகள் உள்ளன, அவற்றின் பாதுகாப்புக்காக அந்தந்த பல்கலைக்கழகங்கள் தனியார் நிறுவனங்களை தெரிவு செய்துள்ளன .
பெண் விடுதிகளுக்கு ஒரு ஆண் மேற்பார்வையாளரும், பெண் பாதுகாப்பு அதிகாரி ஒருவரும், ஆண் விடுதிகளுக்கு ஆண் மேற்பார்வையாளர் நியமிக்கப்பட வேண்டும் என்ற வகையில் பல்கலைகழகங்களும், தனியார் நிறுவனங்களும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
மேலும் ஒரு பாதுகாப்பு அதிகாரி தினசரி இரண்டு மணித்தியாலங்கள் பணி நேரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், அதிகாரிகள் பற்றாக்குறை காரணமாக 24 மணி நேரம் தொடர்ச்சியாக பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஒருவர் 12 மணித்தியாலங்கள் பணியை முடித்த பின்னர் வேறு அதிகாரியை நியமிக்க பாதுகாப்பு நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. அத்துடன் ஒரு துணை நிர்வாகிக்கு மூன்று விடுதிகளின் பொறுப்புக்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது, பாதுகாப்பு அதிகாரிகள் இல்லாமை காரணமாக மாணவர்களின் ஆவணங்கள் மற்றும் சொத்துக்களை பாதுகாப்பது உள்ளிட்ட பல பிரச்சினைகள் எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு அதிகாரிகளை நியமிப்பது, அவர்களுக்கு சம்பளம் வழங்குவது தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் பொறுப்பாகும் என்றார்.







.jpeg)




