இயற்கை அனர்த்தங்களால் தேயிலை தொழிற்துறைக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்த மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் அந்த பாதிப்புக்கள் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் தாக்கம் செலுத்தாது. வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைய ஜனவரி முதல் சம்பள அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உள்நாட்டு சந்தையில் தேயிலை விலையில் எவ்வித அதிகரிப்பும் இல்லை. எனினும் பெருந்தோட்டப் பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக சில தினங்களுக்கு தேயிலை பறிக்க முடியாத நிலைமை காணப்பட்டது. தற்போது மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளதால், தேயிலை தொழிற்துறையும் வழமை போன்று இயங்குகிறது.அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகளை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தேயிலை தொழிற்துறைக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்த மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 2026ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே அதில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கமைய பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் நிச்சயம் வழங்கப்படும்.
ஜனவரியிலிருந்து இந்த சம்பள அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படும். அதற்கமைய பெப்ரவரி 10ஆம் திகதி தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பளம் கிடைக்கப் பெறும். உண்மையில் இந்த சம்பள அதிகரிப்பிற்கு பெருந்தோட்டக் கம்பனிகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பில் கம்பனிகள் 200 ரூபா பங்களிப்பினையும், அரசாங்கம் 200 ரூபா பங்களிப்பினையும் வழங்குகிறது. அதற்கமைய தொழிலாளர்களுக்கு எவ்வித தடையும் இன்றி இந்த சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என்றார்.







.jpeg)

.jpeg)
.jpg)


