பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கு முன்னர் புதிய சட்டவரைவில் 'பயங்கரவாதம்' என்றால் என்னவென்பதற்கு அரசாங்கம் முறையான வரைவிலக்கணம் வழங்க வேண்டும். அரசாங்கம் நினைக்கும் அனைத்தையும் பயங்கரவாதம் என்று கருதினால் தனி மனித சுதந்திரம் அச்சுறுத்தலுக்குள்ளாகி, சர்வாதிகார ஆட்சி முறைமை தோற்றம் பெறும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சரத் வீரசேகர தெரிவித்தார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஆட்சிக்கு வந்தவுடன் திருடர்களை பிடிப்பதாகவும், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனையும், உகண்டாவில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தை நாட்டுக்கு கொண்டுவருவதாகவும் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார்.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருடம் நிறைவடைந்துள்ளது. ஆனால் இந்த வாக்குறுதிகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை வெகுவாக சிதைவடைந்துள்ளது. ஆகவே மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.
ராஜபக்ஷர்கள் மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் இன்று பொய்யாக்கப்பட்டுள்ளது. ராஜபக்ஷர்கள் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தி நாட்டை அபிவிருத்தி செய்தார்கள்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கு முன்னர் புதிய சட்டவரைவில் 'பயங்கரவாதம்' என்றால் என்னவென்பதற்கு அரசாங்கம் முறையான வரைவிலக்கணம் வழங்க வேண்டும்.அரசாங்கம் நினைக்கும் அனைத்தையும் பயங்கரவாதம் என்று கருதினால் தனி மனித சுதந்திரம் அச்சுறுத்தலுக்குள்ளாகி, சர்வாதிகார ஆட்சி முறைமை தோற்றம் பெறும்.
நீதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவில் பயங்கரவாதத்துக்கு முறையான விளக்கம் வழங்கப்படவில்லை. அரசியல் காரணிகளுக்காக தேசிய பாதுகாப்பை அலட்சியப்படுத்த முடியாது. பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறையில் இருந்த காரணத்தால் தான் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு பலமான சட்டம் தேவை என்பதை அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.








.jpeg)




