நாவலப்பிட்டி பஸ்பாகே கோரள பிரதேச செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! ; மோப்ப நாய்களுடன் தீவிர சோதனை


நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரள பிரதேச செயலகத்தின் சேமிப்பு அறையில் வெடிகுண்டு இருப்பதாக அலுவலகத்தின் பொதுவான மின்னஞ்சல் முகவரிக்கு வந்த செய்தியைத் தொடர்ந்து இன்று திங்கட்கிழமை (29) பிரதேச செயலக வளாகம், சேமிப்பு அறை உட்பட அனைத்து பகுதிகளுக்கு விசேட தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாவலப்பிட்டி பஸ்பாகே கோரள பிரதேச செயலக செயலாளருக்கு ஒரு கூடாரத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும், அது இன்றைய தினம் (29) பிற்பகல் 2:00 மணிக்கு வெடிக்கும் எனவும் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. இந்த செய்தியைத் தொடர்ந்து களஞ்சிய அறை உட்பட பிரதேச செயலக வளாகம் அவசர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

உடனடியாகச் செயல்பட்ட பிரதேச செயலாளர், பிரதேச செயலக ஊழியர்களையும் பிரதேச செயலகத்தில் இருந்த மக்களையும் வெளியேற்றி, அது குறித்து பாதுகாப்புப் படையினருக்குத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடந்து நாவலப்பிட்டி பொலிஸார், மோப்ப நாய் பிரிவு,பொலிஸ் விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவு மற்றும் இராணுவத்தின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் வரவழைக்கப்பட்டு பாரிய தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இருந்தும் இதுவரை சந்தேகத்திற்கிடமான வெடிபொருட்கள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துஷாரி ஜெயசிங்க, பிரதேச செயலகத்திற்கு கிடைத்த மின்னஞ்சல் செய்தியின் அடிப்படையில் பிரதேச செயலக வளாகம் ஆய்வு செய்யப்பட்டதாக இங்கு சந்தேகத்திற்கிடமான வெடிபொருட்கள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.