மலையக பகுதிகளில் பாதுகாப்பான வாழ்க்கைச் சூழல் பிரச்சினைக்குரியதாக உள்ளது - நாமல் ராஜபக்ஷ


மலையக பகுதிகளில் பாதுகாப்பான வாழ்க்கைச் சூழல் பிரச்சினைக்குரியதாக உள்ளது. மலையகத்தில் பெரும்பாலான இளைஞர் யுவதிகள் தற்போது தோட்டத் தொழில்களில் ஈடுபடுவதில்லை. அவர்களுக்கு தோட்டக் கம்பனிகள் எவ்வித நிவாரணங்களையும் வழங்கவில்லை. இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் பெருந்தோட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்.முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களை மீண்டும் அவர்களின் வீடுகளுக்கு அனுப்புவது எந்தவகையில் பாதுகாப்பானதாக அமையும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
இயற்கை அனர்த்தங்களையும், அதனால் ஏற்பட்ட இழப்புக்களையும் நியாயப்படுத்தும் வகையில் அரசாங்கம் செயற்படுகின்றது. மண்சரிவுகள் மற்றும் வெள்ளத்தில் உயிரிழந்த சம்பவங்கள் இதற்கு முன்னரும் நேர்ந்துள்ளன என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது.

அனர்த்த நிலைமை குறித்து விடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை அலட்சியப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார் என்பதை ஆராய வேண்டும். இந்த விடயத்தில் அதிகாரிகள் மீது குற்றங்களை சுமத்தி தப்பித்துக்கொள்ள முயற்சிக்க வேண்டாம். இது ஜனாதிபதியின் விடயத்துடன் தொடர்புடையது.

அனர்த்தம் குறித்து ஆராய பாராளுமன்ற தெரிவுக் குழு ஒன்றை நியமிக்க சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த நிலைமைக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் யார்? வளிமண்டலவியல் திணைக்களம் வழங்கிய அறிவித்தல்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? என்பன தொடர்பில் ஆராய வேண்டும். உங்களுக்கு இது வேடிக்கையாக இருக்கலாம். பாதிக்கப்பட்ட மக்களுக்குதான் இதன் கவலை புரியும். இப்போதும் முகாம்களில் மக்கள் இருக்கின்றனர்.

ஒவ்வொரு நிவாரணங்கள் தொடர்பில் ஜனாதிபதி அறிவிக்கின்றார். அதனை எவ்வாறு கொடுப்பது என்று அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதா? தொடர்ந்தும் மக்களை முகாம்களில் வைத்திருக்க முடியாது. அவர்களுக்கு உரிய வசதிகளை வழங்க வேண்டும். தோட்டங்களில் பணி புரியும் மக்களுக்கு வழங்கக்கூடிய தீர்வுகள் என்ன? இந்த மக்களை மீள குடியேற்ற உங்களின் திட்டம் என்ன என்பதனை கூற வேண்டும்.

காணியொன்றை வாங்க 50 இலட்சம் ரூபா வழங்குவதாகவும், முழுமையாக வீடு அழிவடைந்திருந்தால் 100 இலட்சம் ரூபா வழங்குவதாகவும் ஜனாதிபதி குறிப்பிடுகிறார். இதனை எப்போது வழங்கப் போகின்றீர்கள். அனர்த்தம் இடம்பெற்று ஒரு மாதமாகப் போகிறது. ஜனாதிபதி இங்கு பாராளுமன்றத்தில் பல்வேறு விடயங்களை அறிவிக்கின்றார். ஆனால் அதிகாரிகளுக்கு எழுத்து மூலமாக செல்வதில்லை. கிராம சேவகரிடமே மக்கள் கேட்கின்றனர். அரச அதிகாரிகளுடன் முரண்படுகிறார்கள்.

பாடசாலைகள், விகாரைகளில் தங்கியிருக்கும் மக்களை அவர்களின் வீடுகளுக்கு அனுப்ப முன்னெடுக்கும் நடவடிக்கை என்ன? தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அனுமதி வழங்குமா? இது தொடர்பான நடவடிக்கைகள் எப்போது ஆரம்பிக்கப்படும். அரசாங்கம் வாக்குறுதி வழங்கியிருந்தால் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

மலையக பகுதிகளில் பிரச்சினை உள்ளது. மலையகத்தில் பெரும்பாலான இளைஞர் யுவதிகள் தற்போது தோட்டத் தொழில்களில் ஈடுபடுவதில்லை. அவர்களுக்கு தோட்ட கம்பெனிகள் எவ்வித நிவாரணங்களையும் வழங்கவில்லை. இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் பெருந்தோட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றார்.