பொலிஸ் சோதனைச் சாவடியில் மதுபான களியாட்டம் - பொலிஸ் சார்ஜன் கைது




கல்கிஸ்ஸை விஜய வீதி அரச மரத்திற்கு அருகில் அமைந்துள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் மதுபான களியாட்டம் நடத்திய பொலிஸ் சார்ஜன் ஒருவர் கல்கிஸ்ஸை பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (29) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் கடுவலை பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய பொலிஸ் சார்ஜன் ஆவார்.

சந்தேக நபரான பொலிஸ் சார்ஜன் சிவில் பாதுகாப்பு அதிகாரியுடன் இணைந்து கல்கிஸ்ஸை விஜய வீதி அரச மரத்திற்கு அருகில் அமைந்துள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் திங்கட்கிழமை இரவு 09.45 மணியளவில் மதுபான களியாட்டம் நடத்தியுள்ளனர்.

இது தொடர்பில் கல்கிஸ்ஸை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபரான பொலிஸ் சார்ஜன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட பொலிஸ் சார்ஜனை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.