அனர்த்த பாதிப்புகள்; கல்வி சீர்திருத்தத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது !


வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இயல்பு வாழ்வுக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருந்த போதிலும்,ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள கல்விச் சீர்திருத்தத்தை அமுல்படுத்துவதில் எந்தத் தடங்கலும் ஏற்படாதென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கிணங்க எதிர்வரும் ஜனவரியில் இப்புதிய கல்வித்திட்டம் அமுலுக்கு வருமென்றும் அமைச்சு அறிவித்துள்ளது.

 புதிய கல்வி சீர்திருத்தங்களில்,கல்வி நடவடிக்கைகளை பிற்பகல் 02 மணி வரை நீடித்தல் மற்றும் கட்டாயமாக்கப்பட்ட ஐந்து பாடங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் உள்ளன. இது குறித்து அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவிக்கையில்; கல்வி சீர்திருத்தங்கள் திட்டமிட்டபடி நடைபெறும்.பாடசாலைகள் இன்று (16) ஆரம்பமாகியுள்ளன.எனினும் புதிய கல்வித்திட்டங்கள் எதிர்வரும் ஜனவரியிலேயே அமுலுக்கு வரும்.பாடசாலைகளை பிற்பகல் இரண்டு மணிவரை நடத்துவது,பாடத்திட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களுக்கேற்ற வகையிலான கற்பித்தல்கள் உள்ளிட்ட சகலதும் ஜனவரி 22 ஆம் திகதிக்குள் முழுமையாக அமுலாகும்.புதிய சீர்திருத்தத்திற்கு ஏற்ப பாடசாலைகளை நடத்துவதற்கு ஏற்கனவே சுற்றறிக்கைகள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளன.சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு வார பயிற்சியளிக்கப்படும்.சாதாரண தர பரீட்சையில் பாடங்களின் எண்ணிக்கை ஏழாகக் குறைக்கப்படும்.மாணவர்களுக்கு ஐந்து முக்கிய பாடங்கள் பிரதானமாக்கப்பட்டுள்ளன.கணிதம்,ஆங்கிலம், தாய்மொழி, சமயம் மற்றும் அறிவியல் முதலான பாடங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.தொழில்நுட்பம், அழகியல், முகாமைத்துவம் தொழில்முனைவோர், மனித நேயம் சமூக அறிவியல், சுகாதாரம் மற்றும் உடற்கல்வி போன்ற பிரிவுகளிலிலிருந்து மேலும் இரண்டு பாடங்களை மாணவர்களால் தெரிவுசெய்ய முடியும். பாடசாலை நேர அட்டவணை ஒரு நாளைக்கு ஏழு பாடங்களை கற்கும் அட்டவணையாக அமையும். ஒவ்வொறு பாட நேரமும் 50 நிமிடங்களாக நீடிக்கப்பட்டுள்ளன.

இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட பல ஆசிரியர் தொழிற்சங்கங்கள், பாடசாலை நேர நீடிப்பை எதிர்த்துள்ளன.காலை7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை பாடசாலைகளை நடத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளன.மாற்றங்களை இறுதி செய்வதற்கு முன்பு ஆசிரியர்களுடன் கலந்தாலோசிக்க கல்வி அமைச்சு தவறிவிட்டதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளமை குறித்து செயலாளர் பதிலளிக்கைளில்; கருத்துக்களை முன்வைப்பதற்கு கல்வியமைச்சு இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களை தொழிற்சங்கங்களுக்கு வழங்கியது.தொழிற்சங்கங்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த போதுமான வாய்ப்புகளை நாம் வழங்கியிருந்தோம். அனைத்து தொழிற்சங்கங்களும் அழைக்கப்பட்டன. சில பிரதிநிதிகள் கலந்துரையாடலில் ஈடுபடாமல் வெளிநடப்பு செய்தனர்.