மட்டக்களப்பு மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்




இலங்கை தமிழரசுக்கட்சி வசமுள்ள மட்டக்களப்பு மாநகரசபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட பாதீடானது 19மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாநகரசபையின் வரவு செலவு திட்ட சமர்ப்பிக்கும் சபை அமர்வு இன்று நடைபெற்றது.மாநகரசபையின் சம்பிரதாயங்களுக்கு அமைவாக சபையின் அமர்வு ஆரம்பிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதி முதல்வர் தினேஸ்குமார், உறுப்பினர்கள், மாநகரசபையின் ஆணையாளர் என்.தனஞ்செயன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது வரவு செலவு திட்டத்தினை சமர்ப்பித்து மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் விசேட உரையினை நிகழ்த்தினார்.

அதனை தொடர்ந்து வரவு செலவு திட்டம் தொடர்பில் மாநகரசபை உறுப்பினர்கள்,பிரதி முதல்வர் தமது கருத்துகளை தெரிவித்ததுடன் அனேகமான உறுப்பினர்கள் வரவு செலவு திட்டத்திற்கு வரவேற்பளித்தனர்.

இதன்போது பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டதுடன் வரவு செலவு திட்டம் வாக்களிப்புக்கு விடப்பட்டது.

34 உறுப்பினர்களைக்கொண்ட மட்டக்களப்பு மாநகரசபையில் இன்றைய தினம் ஒரு உறுப்பினரை தவிர 33 உறுப்பினர்கள் சமுகமளித்திருந்தனர்.

இதன்போது வாக்களிப்பின்போது தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் 08பேர் நடுநிலையாகவும் சுயேட்சைக்குழுவினை சேர்ந்தவர்கள் மற்றும் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள்,ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் என 22பேர் ஆதரவாகவும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர்கள் மூன்று பேர் எதிராகவும் வாக்களித்தனர்.

இதனடிப்படையில் 19மேலதிக வாக்குகளினால் இலங்கை தமிழரசுக்கட்சி வசமிருக்கும் மட்டக்களப்பு மாநகரசபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் வெற்றிபெற்றது.