'ஒன்டன் செட்ரோன்' எனப்படும் வாந்தி ஏற்படுவதை தூண்டுவதை தடுக்கும் மருந்து பாவனையிலிருந்து முற்றாக நீக்கம் !



வாந்தி ஏற்படுவதை தூண்டுவதை தடுக்கும் மருந்து பயன்பாட்டினால் இரு பெண்கள் உயிரிழந்துள்ளதாகவும், கண்டி வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாகவும் சந்தேகிக்கப்படும் சம்பவங்கள் தொடர்பில் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஒன்டன் செக்ட்ரோம் எனப்படும் குறித்த மருந்து முழுரைமயாக பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (16) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஒன்டன் செட்ரோன் - Ondansetron (வாந்தி ஏற்படுவதை தூண்டுவதை தடுக்கும் மருந்து) என்ற மருந்தினைப் பயன்படுத்தியதால் இருவர் உயிரிழந்துள்ளதாக சந்தேகத்தின் அடிப்படையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து பாவனையால் உயிரிழப்பு ஏற்பட்டடிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில் இவ்வாறு சந்தேகிக்கப்படும் இரு மரணங்கள் பதிவாகியுள்ளன.

37 மற்றும் 33 வயதுடைய இரு பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மேலும் கடந்த 12ஆம் திகதி கண்டி வைத்தியசாலையில் இந்த மருந்தை வழங்கிய பின்னர் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது. அதன் பின்னர் குறித்த மருந்து முழுமையாக பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை நாட்டுக்கு விநியோகிக்கும் 11 பதிவு செய்யப்பட்ட விநியோகத்தர்கள் உள்ளனர். தேசிய ஒளடத கட்டுப்பாட்ட அதிகாரசபையில் ஆகக் கூடியது 15 விநியோகத்தர்கள் பதிவு செய்ய முடியும்.

இங்கு 11 விநியோகத்தர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 11 விநியோகத்தர்கள் பங்களாதேஷில் உற்பத்தி செய்யப்படும் மருந்தினையும், ஏனையோர் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மருந்தினையும் விநியோகிக்கின்றனர். எனினும் இவ்வனைத்து நிறுவனங்களும் யு.எஸ்.பி. (United States Pharmacopeia ) சான்றுக்கமையவே மருந்தினை விநியோகிக்கின்றனர். மாறாக இந்திய சான்றுக்கமைய அல்ல. அந்த வகையில் இந்த மருந்து குறித்த பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர் அது குறித்து அறிவிக்கப்படும் என்றார்.