மன்னார் நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச் சூடு ; பிரதான சந்தேக நபர் உட்பட இருவர் கைது !


மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உட்பட இரண்டு சந்தேக நபர்களை ஞாயிற்றுக்கிழமை (28) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக கடந்த ஜனவரி மாதம் 16ம் திகதி இரண்டு நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

அதன்படி, கிடைத்த தகவலின் அடிப்படையில் மன்னார் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவும், மன்னார் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை (28) காலை தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டன.

இதன்போது, மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில உள்ள ஒரு விடுதியில் ஒரு கைக்குண்டுடன் மறைந்திருந்த மேற்படி குற்றத்தைத் திட்டமிட்ட பிரதான சந்தேக நபரும், அவருக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

சந்தேக நபர்கள் 22 மற்றும் 38 வயதுடைய உயிலங்குளத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் மன்னார் மாவட்ட மக்கள் மத்தியில் பாரிய அச்சத்தை ஏற்படுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.