இலங்கை காப்புறுதி சங்கம் (IASL) நாட்டின் வாகன காப்புறுதி சேவைகளை டிஜிட்டல்மயமாக்கும் திட்டத்தின் ஓர் அங்கமாக மின்னணு மோட்டார் காப்புறுதி டிஜிட்டல் அட்டையை அறிமுகப்படுத்தவுள்ளது.
இதன்படி, மின்னணு மோட்டார் காப்புறுதி டிஜிட்டல் அட்டையின் உத்தியோகப்பூர்வ வெளியீட்டு விழாவும், இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 500 டேப்லெட்கள் கணினிகளை கையளிக்கும் நிகழ்வும் எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதி பத்தரமுல்லை சுஹுருபாயவில் உள்ள பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சில் இடம்பெற உள்ளது.
இந்நிகழ்வில் இலங்கை காப்புறுதி சங்கத்தின் உயர் அதிகாரிகள், இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறை ஆணையம் (IRCSL), பொதுக் காப்புறுதி நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள், இலங்கை பொலிஸ் பிரதிநிதிகள், பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, தொலைத்தொடர்பு துறை பங்காளிகள், பொதுக் காப்புறுதி மன்றம் (GIF) மற்றும் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை மன்றம் (MSF) ஆகியவற்றின் உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்த அறிமுக விழா இலங்கையின் மோட்டார் காப்புறுதி டிஜிட்டல்மயமாக்கல் பயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையவுள்ளது. பாரம்பரிய அச்சிடப்பட்ட காப்புறுதி அட்டைகளுக்குப் பதிலாக மின்னணு மோட்டார் அட்டை பயன்பாட்டிற்கு வர உள்ளது.
மேலும், 13 பொதுக் காப்புறுதி நிறுவனங்கள் இணைந்து வழங்கும் 500 டெப்லெட் கணினிகள் பொலிஸ் திணைக்களத்தின் புதிய விபத்து முகாமைத்துவ அமைப்பை செயல்படுத்துவதற்கு உதவியாக இருக்கும். இதன் மூலம் நிகழ்நேர டிஜிட்டல் அறிக்கையிடல் (real-time digital reporting) வலுப்படுத்தப்பட்டு, வீதிப் பாதுகாப்பு முகாமைத்துவம் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, தேசிய காப்புறுதி சரிபார்ப்பு முறைமை (National Insurance Verification System) 2026 ஜனவரி முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. அதேபோல, 2252 என்ற எளிய குறியீட்டை பயன்படுத்தி USSD, குறுஞ்செய்தி அல்லது IVR மூலம் காப்புறுதி விபரங்களை உடனடியாக சரிபார்க்க முடியும்.







.jpeg)

.jpeg)


.jpg)