.jpg)
டிட்வா சூறாவளி காரணமாக ஏற்படும் பொருளாதார பாதிப்புகளை நிவர்த்தி செய்வதற்காக இலங்கைக்கு 206 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நிதி உதவியை வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
நவம்பர் 28 ஆம் திகதி தாக்கிய சூறாவளியினால் 600 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததுடன், 100,000 இற்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்தனர். மேலும், அனர்த்தம் ஏற்பட்ட பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரங்கள் பெருமளவில் சேதமடைந்ததுடன், இதன் விளைவாக நாட்டின் வருமானம் மற்றும் கொடுப்பனவுகளில் பாதிப்பு ஏற்பட்டது.
இந்த அவசரகாலத்தின் போது சர்வதேச நாணய நிதியம் அளித்த உதவிக்கு அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளது. இந்த உதவி அவசர மனிதாபிமானத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், மீள்கட்டமைப்பு மற்றும் புனர்நிர்மாணப் பணிகளுக்கு பெரிதும் உதவும்.
நிதி ஒழுக்கம், கடன் நிலைபேற்றுத்தன்மை மற்றும் இந்த நிதிகளைப் பயன்படுத்தும்போது வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறலைப் பேணி, அரச நிதி முகாமைத்துவ சட்டங்களுக்கு இணங்க செயற்படுவதை உறுதி செய்வதற்கான அர்ப்பணிப்பை அரசாங்கம் மீண்டும் உறுதிப்படுத்தியது.
இந்தப் பேரழிவின் பொருளாதார தாக்கத்தை முழுமையாக மதிப்பிடுவதற்கு எடுக்கும் காலம் காரணமாக, சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் நீடிக்கப்பட்ட கடன் வசதி நிகழ்ச்சித் திட்டத்தின் ஐந்தாவது மீளாய்வை ஒத்திவைத்துள்ளதுடன், அந்த கலந்துரையாடல்களை 2026 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளன.
அவசர புனரமைப்பு மற்றும் மனிதாபிமான தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்த அவசர நிதியுதவி பயன்படும் என்று குறிப்பிட்ட சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகமுரா, சூறாவளி மற்றும் அதன் பொருளாதார தாக்கத்திலிருந்து மீண்டு வரும்போது இந்நாட்டுத் தலைவர்கள், நிதி முகாமைத்துவம், வெளிப்படைத்தன்மை மற்றும் தொடர்ச்சியான பொருளாதார மறுசீரமைப்பு செயல்முறைக்கு அர்ப்பணிப்புடன் இருப்பார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.






.jpeg)
.jpeg)

.jpg)


