ஐக்கிய மக்கள் சக்திக்கு 6 வயது! கதிர்காமத்தில் விசேட பூஜை வழிபாடுகள்




ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சி ஸ்தாபிக்கப்பட்டு ஆறு வருடங்கள் பூர்த்தியடைவதனை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கும் கட்சிக்கும் ஆசி வேண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க புனித கதிர்காமம் கிரிவெஹெர விகாரை வளாகத்தில் பெப்ரவரி 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் பல்வேறு விசேட சமய நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்த நிகழ்வுகளில், மஹாசென் தேவாலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து அஷ்டபலபோதியவில் விசேட சமய அனுஷ்டானங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவினால் புனித அரச மரத்திற்கு 'அட்டபிரிகரை' வழங்கி வைக்கப்பட்டது.

சமய அனுஷ்டானங்களைத் தொடர்ந்து, கிரிவெஹெர தூபிக்கான விசேட வஸ்திர (கப்ருக்க ) பூஜை இடம்பெற்றது. பின்னர், சர்வராத்திரியப் (முழு இரவு) பிரித் பாராயணம் இடம்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து மகா சங்கத்தினருக்குப் பிரிகர மற்றும் காலை நேரத் தானம் வழங்கி வைக்கப்பட்டு ஆசிகள் பெறப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்துகொண்டார். அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள், கட்சியின் தேர்தல் தொகுதி அமைப்பாளர்கள், இணைப்புக் குழுக்களின் தலைவர்கள், கட்சிச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பெருமளவிலான பிரதேச மக்களும் கலந்துகொண்டனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி, நாட்டில் கல்வி, சுகாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு முற்போக்கான சமூக மற்றும் அரசியல் ரீதியிலான சேவைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.