விசாரணைக்கு வர தைரியம் காட்டிய நாமல், விசாரணைக்கு செல்லும் போது ஆட்களைத் தேடி அலைகிறார் – அமைச்சர் சுனில் வட்டகல


விசாரணைகளுக்கு அழையுங்கள் தைரியமாக வருகிறோம் என்று குறிப்பிட்ட நாமல் ராஜபக்ஷ தற்போது விசாரணைக்கு செல்லும் போது ஆட்களை தேடித் திரிகிறார். எனக்கு எதிராக மான நஷ்ட வழக்கு தாக்கல் செய்வதாக நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.ஆனால் இன்றுவரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவில்லை. வழக்குத்தாக்கல் செய்யும் வரை பார்த்துக் கொண்டிருக்கிறேன். அப்போது தான் நாமலின் மானம் பற்றி பல விடயங்களை குறிப்பிடுவேன் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (06) நடைபெற்ற பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

நாமல் ராஜபக்ஷ பௌத்த மதத்தை தற்போது கையில் எடுத்து தான் பௌத்த பாதுகாவலன் என்று குறிப்பிடுகிறார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்தால் பௌத்த மதம் இல்லாமல் போகும், அரசியலமைப்பில் 09 ஆம் உறுப்புரிமை இல்லாமல் போகும் என்று குறிப்பிட்டார்கள்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்ததில் இருந்து இன்றுவரை பௌத்தம் மதம் உட்பட சகல மதங்களுக்கும் முன்னுரிமை வழங்கியுள்ளார். மதத்தை முன்னிலைப்படுத்தி தோற்றுவிக்க முயற்சித்த முரண்பாடுகளுக்கு சட்டத்தின் ஊடாக உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இதனையும் ஒரு தரப்பினர் தங்களின் இனவாத செயற்பாடுகளுக்கு சார்பாகவே பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.

பாதாளக்குழு தலைவன் கெஹல்பத்தரே பத்மேவுடன் கொண்டிருந்த தொடர்புப் பற்றி வாக்குமூலமளிப்பதற்கு நாமல் ராஜபக்ஷ அண்மையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டார். பரிவாரங்களுடன் குற்றப்புலனாய்வுக்கு வந்த நாமல் ராஜபக்ஷ வாக்குமூமலளித்ததன் பின்னர் நாமல் ராஜபக்ஷ 323 கொள்கலன்கள் எங்கே என்று கேள்வி கேட்கிறார்.

விசாரணைகளுக்கு அழையுங்கள் தைரியமாக வருகிறோம் என்று குறிப்பிட்ட நாமல் ராஜபக்ஷ தற்போது விசாரணைக்கு செல்லும் போது ஆட்களை தேடித் திரிகிறார். எனக்கு எதிராக மான நஷ்ட வழக்கு தாக்கல் செய்வதாக நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.ஆனால் இன்றுவரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவில்லை. வழக்குத்தாக்கல் செய்யும் வரை பார்த்துக் கொண்டிருக்கிறேன். அப்போது தான் நாமலின் மானம் பற்றி பல விடயங்களை குறிப்பிடுவேன் என்றார்.