அமைச்சர்கள் தங்கள் விருப்பப்படி தொழில்களைத் தடை செய்ய முடியாது - சஜித் பிரேமதாச



கடற்கரையிலிருந்து 200 கடல் மைல் தூரம் பிரத்தியேக பொருளாதார வலயமாக நமது நாட்டிற்கு கடல் உரித்து காணப்பட்ட போதிலும், இதுவரை நமது நாட்டால் மீன்பிடித் தொழிலில் உரிய முன்னேற்றத்தை அடைந்து கொள்ள முடியாதுள்ளது. அறிவியல் ரீதியிலான மதிப்பீடு இன்றி மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோருக்கு மாற்று வருமான மூலங்களை வழங்காமல், அமைச்சர்கள் தங்கள் விருப்பப்படி தொழில்களைத் தடை செய்ய முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக கரைவலை மீனவர்கள் நேற்று சனிக்கிழமை முன்னெடுத்த அமைதி வழி ஆர்ப்பாட்ட இடத்துக்குச் சென்று அவர்களின் பிரச்சினைகளை ஆராயும் வேளையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

நாட்டைச் சூழ கடல் இருந்தாலும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மீன்பிடித் தொழிலின் பங்களிப்பு 1.4 சதவீதமாக மாத்திரமே உள்ளது. மீன்பிடி வளங்களைப் பாதுகாக்கவும், மீன்வள பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாமையே இதற்குக் காரணமாகும்.

கடற்கரையிலிருந்து 200 கடல் மைல் தூரம் பிரத்தியேக பொருளாதார வலயமாக நமது நாட்டிற்கு கடல் உரித்து காணப்பட்ட போதிலும், இதுவரை நமது நாட்டால் மீன்பிடித் தொழிலில் உரிய முன்னேற்றத்தை அடைந்து கொள்ள முடியாமலேயே உள்ளது.

மீன்பிடித் துறையில் உள்ள பெரும்பாலான கொள்கை வகுப்பாளர்களுக்கு இது குறித்த சரியான தெளிந்த புரிதல் இல்லை. கரைவலை, மடல் பண்ணை, ஒரு நாள் பயணங்கள், பல நாள் பயணங்கள் என பல வகையான முறைகள் காணப்பட்டாலும், அரசாங்கத்திற்கு இது தொடர்பில் போதிய தெளிவில்லை. கரைவலை மீன்பிடிக்கென மீன்பிடி துறைமுகங்கள் கூட அமைந்து காணப்படுகின்றன.

இந்த மீன்பிடித் தொழில் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாறும்போது, எந்த விதிமுறைகளும் இல்லாமல் அமைச்சரின் வெறும் வார்த்தையின் பேரில் இந்த மீன்பிடித் தொழில் தடை செய்யப்பட்டால் அது தவறான நடவடிக்கையாகும்.

இதுபோன்ற தடை அமுல்படுத்தப்படுவதற்கு முன்பு சுற்றுச்சூழல் மதிப்பீடு மேற்கொள்ளப்பட வேண்டும். என்றாலும், இதுபோன்ற விஞ்ஞானபூர்வ தரவு மையப்படுத்தப்பட்ட நடைமுறை இங்கு அணுகப்படவில்லை என்பதனால் இங்கு பிரச்சினை காணப்படுகிறது.

தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தேர்தல் காலத்தில் படகுகளில் ஏறி மீனவர்கள் மத்தியில் பல்வேறு உரைகளை நிகழ்த்திய போதிலும், இந்த அரசாங்கத்தின் கீழ் நாட்டிற்கு தேசிய மீன்பிடிக் கொள்கையொன்று இல்லை.

நமது நாட்டின் இயற்கை வளங்களை நிலைபேறான முறையில் பயன்படுத்துவதற்கு இந்த அரசாங்கத்திடம் தொழில்நுட்பம் இல்லை. இந்த அரசாங்கம் மீனவ சமூகத்தையும் ஏமாற்றியுள்ளது. இப்போதும் கூட, இந்த முறைகளைப் பயன்படுத்தி புதிதாக ஏதாவது அறிமுகப்படுத்தப்படும்போது, அது தீங்கு விளைவிக்கும் என்று வெறுமனே வார்த்தைகளால் மட்டும் சொல்வதற்குப் பதிலாக, அறிவியல் ரீதியிலான மதிப்பீட்டை அரசாங்கம் நடத்த வேண்டும்.

இத்தொழிலில் ஈடுபடுவோருக்கு மாற்று வருமான மூலங்களை வழங்காமல், அமைச்சர்கள் தங்கள் விருப்பப்படி தொழில்களைத் தடை செய்ய முடியாது. பாராளுமன்றம் மீண்டும் கூடும் சந்தர்ப்பத்தில் இந்தப் பிரச்சினை குறித்து கேள்வியெழுப்புவேன்.

பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இந்தப் பிரச்சினைக்காகக் குரல் கொடுப்பேன். கடல் மற்றும் நன்னீர் மீன்பிடித் தொழில்களை மேம்படுத்துவது குறித்து இந்த அரசாங்கத்திற்கு எந்தப் புரிதலும் இல்லை. ஏனைய நாடுகள் நமது கடல் எல்லைக்குள் நுழைந்து நமது மீன் வளங்களை சூறையாடும்போது அரசாங்கம் மேலே பார்த்துக் கொண்டிருக்கின்றது என்றார்.