
கம்பளை - அம்புலுவாவ பகுதியில் அமைக்கப்பட்டு வரும் கேபிள் கார் (Cable Car) திட்டத்தினால் எவ்வித சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படாது என உறுதிப்படுத்தப்பட்டால், அதனை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சர் கலாநிதி தம்மிக படபெந்தி தெரிவித்துள்ளார்.
அம்புலுவாவ பகுதிக்கு அண்மையில் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்தத் திட்டம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, அம்புலுவாவ கேபிள் கார் திட்டப்பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்திட்டம் தொடர்பான முழுமையான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது அமைச்சருடன் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்ன கருத்துத் தெரிவிக்கையில்,
இத்திட்டத்தினால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவித்தார். அத்துடன், இப்பகுதியின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த இத்திட்டம் அவசியம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும்,சுற்றுச்சூழல் அமைச்சு மற்றும் உரிய அதிகாரிகளின் இறுதி அறிக்கையின் பின்னரே, இத்திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்துத் தீர்மானிக்கப்படும் எனத் தெரியவருகிறது.












.webp)