கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: சட்டத்தரணி குறித்த அதிரடித் தகவல்கள்


கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்திற்கு உதவி மற்றும் உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி தமரா குமாரி அபேரத்ன தொடர்பான புதிய தகவல்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (05) நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்தத் தகவல்களை வழங்கியது.

சட்டத்தரணி கைது செய்யப்பட்டபோது பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட சுமார் இரண்டரை கோடி ரூபா (2.5 கோடி) பெறுமதியான ஹோண்டா வெசல் ரக கார் மற்றுமொருவரின் பெயரில் இருந்தபோதிலும், அது குறித்த சட்டத்தரணிக்கே சொந்தமானது என விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.

வில்பிரட் திசாநாயக்க என்பவரின் பெயரில் அந்த வாகனம் பதிவு செய்யப்பட்டிருந்தது. எனினும், அவர் வழங்கிய வாக்குமூலத்தின்படி, குறித்த சட்டத்தரணியே தனது சொந்தப் பணத்தைக் கொண்டு இந்த வாகனத்தை வாங்கியுள்ளார். இதற்கான பணம் எவ்வாறு திரட்டப்பட்டது என்பது குறித்தும், அவரது வங்கிக் கணக்குகளில் இடம்பெற்ற பாரிய பணப் பரிமாற்றங்கள் குறித்தும் CID விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குறித்த சந்தேகநபர் தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

கொலைச் சம்பவத்தைச் செய்ததாகக் கூறப்படும் துப்பாக்கிதாரிக்கு, குறித்த சட்டத்தரணி அவர்களுக்கு தேவையான 2 கழுத்துப் பட்டிகள், சட்டத்தரணிகளின் வாகனங்களில் பயன்படுத்தப்படும் இலச்சினை பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர், தண்டனைச் சட்டக்கோவை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவை ஆகிய சட்டப் புத்தகங்கள், போலி சட்டத்தரணி அடையாள அட்டை ஒன்றைத் தயாரிப்பதற்குத் தேவையான புகைப்படங்கள் ஆகிய பொருட்களை வழங்கியுள்ளமை விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இது தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது.