மாணவியை தாக்கிய ஆசிரியர் கைது



நானுஓயாவில் பாடசாலை மாணவியை தாக்கிய ஆசிரியர் பொலிஸாரால் வெள்ளிக்கிழமை (06) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நானுஓயா நகரில் இயங்கும் பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரை ஆசிரியர் தாக்கியதில் பாதிப்படைந்த மாணவி வியாழக்கிழமை (05) நானுஓயா ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், தாக்குதல் இடம்பெற்று இரண்டு நாட்களின் பின் நானுஓயா பொலிஸாரால் குறித்த ஆசிரியரை கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த ஆசிரியரை இன்று (07) நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆசிரியர் தாக்கியதில் மாணவிக்கு அடிகாயங்கள் மற்றும் உட்காயங்கள் ஏற்பட்டு தானாகவே சிறுநீர் கசிவு ஏற்பட்டுள்ளது .

தரம் 08 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு ஆசிரியரால் தாக்கப்பட்டுள்ளார்.

எனினும் (06) வெள்ளிக்கிழமை குறித்த மாணவி பாடசாலைக்கு செல்ல வில்லை எனவும் தொடர்ந்து தலை வலி ,தலைச்சுற்று குமட்டல் போன்றவை அதிகமாக உள்ளதால் நுவரெலியா மாவட்ட பொது வைத்திய சாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக பெற்றோர் தெரிவித்தனர்.

பாடசாலை முடிந்து வீடு திரும்பிய மாணவியிடம் பெற்றோர் விசாரித்த போது, நடந்தவற்றை கூறி தனது அடிகாயங்களையும் உட்காயங்களையும் காட்டியுள்ளார். தொடர்ந்து மாணவியை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லவும் பொலிஸ் நிலையத்தில் மாணவி மூலம் முறைப்பாட்டை பதிவு செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த சம்பவம் குறித்து நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .