தித்வா புயல் சேதங்களுக்கு நிதி வசூலிப்பதாக மோசடி ; மக்களே அவதானம் !


தித்வா புயல் பல இடங்களை புரட்டிப்போட்டு தாண்டவமாடி விட்டுசென்றுவிட்டது. பலரும் மண்ணோடு மண்ணாக புதைந்து விட்டனர். சிலர் சடலமாக மீட்கப்பட்டனர். உறவுகளை மட்டுமன்றி சொத்துக்களையும் இழந்த பலர் அந்த மீளாத் துயரில் இருந்து இன்னும்மீண்டெழ முடியாத நிலையில் உள்ளனர்.

இந்நிலையில், நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுக்கப்பட்டு வருகின்றது. தனி நபர்கள் நிறுவனங்கள் பொது அமைப்புகளும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றன. அரசாங்க உதவிகள் கிடைக்காதவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

தித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்கும்செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அத்துடன், விவசாயத்தை கட்டியெழுப்ப, தேவையான உதவிகளையும் பலரும் செய்துக்கொடுகின்றனர்.

எனினும், தித்வா புயலை பயன்படுத்தி, மிகவும் கேவலமான பல செயற்பாடுகள் இடம்பெற்றுகின்றன. இந்நிலையில்தான், பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில், ஒருவர் கைவரிசையை காண்பித்துள்ளார்.

கறுப்பு நிறமுழுக்காட்சட்டையையும் வெள்ளை நிற சேட்டையும் அணிந்து தன்னை ஓர் அதிகாரி போல காண்பித்துக் கொண்ட ஒருவர், நுவரெலியா பிரதேச செயலகத்தில் பணி புரிவதாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு நிதி சேகரித்து வருகிறார்.

மோட்டார் சைக்கிளில் தனியாக வந்திருக்கும் அந்த கில்லாடி,பொகவந்தலாவை, கெர்கஸ்வோல்ட் பிரிவுகளில் உள்ள தோட்டங்களில், பணத்தை வசூலித்ததாகவும்,எந்தவொரு இடத்திலும் தலைக்கவசத்தை அவர் கழற்றவில்லை எனவும் அறியமுடிகின்றது.

மனம் இறங்கிய சிலர், தங்களுக்கு இயன்ற நிதியுதவியை செய்துள்ளனர். ஒரு சிலர் மறுத்துவிட்டனர். அவ்வாறு மறுக்கும் வீடுகளுக்கு முன்பு நீண்ட நேரம் அவர் காத்திருப்பதில்லை எனவும், மிக விரைவாக நிதியை பெற்றுக்கொள்வதிலேயே குறியாக இருப்பதாகவும்அங்கிருக்கும் சிலர் தெரிவிக்கின்றனர்.