நாட்டில் பல பாடசாலைகளை மூடிவிட்டு இலவச கல்வியை கட்டுப்படுத்த முயற்சி ; அரசாங்கம் தெளிவான பதிலொன்றை வழங்க வேண்டும்- சஜித் பிரேமதாச !


நாட்டில் பல பாடசாலைகளை மூடிவிட்டு இலவச கல்வியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதனால் இது தொடர்பில் அரசாங்கம் தெளிவான பதிலொன்றை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (5) பிரதமரிடம் கேட்ட இடையீட்டு கேள்வி ஒன்றின்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

நாட்டில் எந்த பாடசாலையும் மூடப்போவதில்லை என பிரதமர் தெரிவிக்கின்றபோதும், நாட்டில் பல பாடசாலைகளை மூடிவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதேச மட்டங்களில் இருந்து எங்களுக்கு அறியக்கிடைக்கிறது. இது தொடர்பில் எங்களுக்கு முறையான பதில் ஒன்று தேவையாகும்.

அதேபோன்று ஆசியரிகளின் கோரிக்கையான எஞ்சிய மூன்றில் இரண்டு கொடுப்பனவை வழங்குவதாக தெரிவித்தே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. அந்த வாக்குறுதி தற்போது செயற்படுவதில்லை.அதேபோன்று பாடசாலை கட்டமைப்பில் பெற்றோர்களிடம் பணம் சேகரித்து, பாடசாலைகளுக்கு தேவையான தொலைக்காட்சி, ஸ்மாட் பலகை போன்ற உபகரணங்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதனால் இந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி, இலவச கல்வியை பாதுகாத்து, பாடசாலைகளுக்கு தேவையான உபகரணங்களை கல்வி அமைச்சினூடாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று அரசாங்கம் கல்வி நடவடிக்கையை டிஜிட்டல் மயமாக்க கொள்கை ரீதியில் தீர்மானம் எடுத்திருக்கிறது. ஆனால் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் இருந்து 5ஆம் தரம் வரை தகவல் தொழிநுட்ப பாடவிதானம் கற்பிக்க ஆரம்பிக்கப்பட வேண்டும். ஆனால் எமது பாடசாலைகளில் தகவல் தொழிநுட்ப பாடம் 6ஆம் வகுப்பிலே ஆரம்பிக்கப்படுகிறது. டிஜிட்டல் மயமாக்கல் அரசாங்கத்தின் கொள்கை என்றால், முதலாம் தரத்தில் இருந்து தகவல் தொழிநுட்ப கல்வியை ஆரம்பிக்க வேண்டும். அது ஆங்கில மொழியிலே மேற்கொள்ள வேண்டும். அந்த விடயங்களும் செயற்படவில்லை.

அதேபோன்று கம்பஹா விக்மாரச்சி ஆயுர்வேத பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்பு துறையை மூடிவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோன்று ஸ்ரீ ஜயவர்த்தன பல்கலைக்கழகத்தி்ன் பல் வைத்திய துறையை மூடிவிடுவதற்கும் அரசாங்கம் தீர்மானத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதனால் இலவச கல்வியை கட்டுப்படுத்த எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பில் பிரதமர் தெளிவான பதில் ஒன்றை வழங்க வேண்டும் என்றார்.