பாராளுமன்ற உறுப்பினர்களின் வரப்பிரசாதங்களை விட புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது அவசியம் - நாமல் ராஜபக்ஷ



நாட்டின் தற்போதைய நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதை விட, அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்துகொடுப்தற்கே அரசாங்கம் முனுரிமையளிக்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நிறுத்துவதன் மூலம் பாரிய நிதியை மக்களுக்கு வழங்கிவிட முடியும் என அவர்கள் நம்புகிறார்கள் எனின் அதனைச் செய்யட்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கடும் விசனம் வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி மறுசீரமைப்பு மற்றும் கிராம மட்டக் கூட்டங்களில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இவ்விடயம் குறித்துத் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது நிலவும் பொருளாதாரச் சூழலில் நிபுணர்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காத அரசாங்கம், தனது தேவைகளுக்காகப் பொருட்களைக் கடனாகப் பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டிவருகிறது. தித்வா புயலால் வீடுகளையும் காணிகளையும் இழந்துள்ள மக்களுக்குப் பாதுகாப்பான இடங்களை வழங்குவதை விட, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதே மிக முக்கியமான விடயம் என அரசாங்கம் கருதுகின்றது.

மஹிந்த ராஜபக்ஷவை உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற்றுவதன் மூலம் நாட்டு மக்களுக்குப் பெரிய இலாபம் கிடைத்துவிடும் என அரசாங்கதிதினர் கணித்தனர். பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம், வரப்பிரசாதங்களை நிறுத்துவதன் மூலம் பாரிய நிதியை மக்களுக்கு வழங்கிவிட முடியும் என அவர்கள் நம்புகிறார்கள் எனின் அதனைச் செய்யட்டும். அதேவேளை வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாட்டினால் அவதியுறும் நோயாளிகள் குறித்தும், நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கும் வைத்தியர்கள் குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

நிலக்கரி கொள்வனவு உள்ளிட்ட பல விடயங்களில் ஊழல்கள் இடம்பெறும்போது, அதனை மறைப்பதற்காக மற்றவர்களைத் திருடர்கள் எனச் சித்தரித்து மக்கள் மத்தியில் அதிருப்தியைத் திசைதிருப்ப முயல்கின்றனர். நாட்டைப் பாதுகாத்த இராணுவத்தினரை கௌரவிக்கத் தவறியுள்ள இவர்கள், தேவையற்ற ஆடம்பரங்களை அனுபவிப்பதில் மட்டும் முன்னிற்கின்றனர்.

எமது கட்சி தற்போது கிராம மட்டத்திலிருந்து மீண்டும் பலமாக எழுச்சி பெற்று வருகிறது. எம்மை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் எம்முடன் இணைந்து வருகின்றனர். எவரையும் தோற்கடிப்பதற்காகவோ அல்லது பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றுவதற்காகவோ அரசியலில் ஈடுபடவில்லை. மக்களின் உண்மையான பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்குத் தீர்வு காண்பதே எமது இலக்காகும் என்றார்.