குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்காணிக்கவும் முகாமைத்துவம் செய்யவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் மற்றும் பொது முகாமையாளரினால் விசேட செயற்பாட்டுக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
நிலவும் வறட்சியான வானிலையால் நீர் ஆதாரங்கள் வேகமாக வற்றி வருவதையும், அதன் காரணமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ள நீர் உற்பத்தித் திறனை வினைத்திறனுடன் முகாமைத்துவம் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் கருத்திற் கொண்டு, நீர் உற்பத்தி மற்றும் விநியோகத்தைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் சம்பந்தப்பட்ட துறைசார் அதிகாரிகளைக் கொண்ட இந்த விசேட செயற்பாட்டுக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவானது நீர் ஆதாரங்களில் நிலவும் பிரச்சினைகள், நீர் உற்பத்தித் திறன் மற்றும் விநியோக முறைகளைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பதுடன், அடையாளம் காணப்பட்ட காலப்பகுதிகளுக்குள் தினசரி மற்றும் வாராந்த நிலைமைகளை மீளாய்வு செய்யும்.
இதற்கமைய, தற்போதைய நிலைமைகள் தொடர்பான முகாமைத்துவ அறிக்கைகளை சமர்ப்பிக்கவும், சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வெற்றிகரமாக முன்னெடுத்துப் போதுமான நீர் விநியோகத்தை உறுதிப்படுத்தவும் எதிர்பார்ப்பதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதன் மூலம் எதிர்காலத்தில் நாளந்தம் நீண்ட நேரத்திற்கு நீர் விநியோகம் தடைப்படுவதைத் தவிர்க்கவும், அனைத்து நுகர்வோரும் தங்களது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நீரைப் பகிர்ந்தளிக்கவும், கட்டுப்படுத்தவும் மற்றும் முகாமைத்துவம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். வற்றி வரும் நீர் ஆதாரங்கள் வழமைக்குத் திரும்பும் வரை இக்குழு செயற்படும்.
தொடரும் வறட்சியான காலநிலையால் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நீர் உற்பத்தித் திறன் காரணமாக, எதிர்காலத்தில் நுகர்வோர் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதைத் தவிர்க்கவும், சேவையை ஆகக்குறைந்த மட்டத்திலாவது பேணவும், நுகர்வோர் அத்தியாவசியத் தேவைகளுக்கு மாத்திரம் நீரைப் பயன்படுத்தி ஒத்துழைப்பு வழங்குவது இத்தருணத்தில் அவசியமானது என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.













