ஆசிரியர்களின் சம்பளம் கட்டம் கட்டமாக அதிகரிக்கப்படும் - பொதுநிர்வாக அமைச்சர்




அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திற்கு அமைய, உலகை வடிவமைக்கும் ஆசிரியர் சேவையில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவர்களின் சம்பளத்தை கட்டம் கட்டமாக உயர்த்துவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் சேவையை நாட்டின் அதிக சம்பளம் பெறும் முதல் 10 தொழில்களில் ஒன்றாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

வனாத்தவில்லுவ, நாகமடுவ மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைத் தொகுதியை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

2021 ஆம் ஆண்டு முதல் தாமதமடைந்து வந்த ஆசிரியர் நியமனச் செயல்முறை, நாட்டில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வுகாணும் வகையில் இந்த ஆண்டு துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. போட்டிப் பரீட்சைகள் வரும் நாட்களில் நடத்தப்படும். இந்த ஆட்சேர்ப்புகள் எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி, பரீட்சை மற்றும் நேர்முகத் தேர்வுகளின் அடிப்படையில் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்படும்.

தற்போதைய பரீட்சை மையக் கல்வி முறையினால் பிள்ளைகள் பாடநெறிக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளை இழந்துள்ளன. அண்மைய புத்தாண்டு காலப்பகுதியில் பதிவான நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவங்களைப் பார்க்கும்போது, பிள்ளைகளுக்கு நீச்சல் போன்ற உயிர்காக்கும் திறன்களை வழங்குவதன் முக்கியத்துவம் தெளிவாகிறது

பாடத்திட்டத்தை மறுசீரமைப்பதன் மூலம் கல்வி முறையில் ஒரு பாரிய மாற்றத்தை நாம் ஆரம்பித்துள்ளோம். எதிர்காலத்தில் தரம் 9 இல் தேசிய அளவிலான பரீட்சையொன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்தப் பரீட்சையின் மூலம்இ பிள்ளைகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப கல்விசார் கல்வி அல்லது தொழிற்கல்வியைத் தொடர வாய்ப்பு கிடைக்கும். இதனை எளிதாக்க, சுமார் 50 தொழிற்பயிற்சி நிறுவனங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

பாடசாலை மாணவர்களை இலக்கு வைக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல் அவதானத்துக்குரியது. தற்போது கிராமங்களுக்குள்ளும் ஊடுருவி, 12 முதல் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களைக் குறிவைக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த மகா சங்கத்தினர்,ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் அதிகாரிகளின் கூட்டு முயற்சி அவசியம் . மாணவர்கள் ஒருபோதும் போதைப்பொருள் பக்கம் திரும்ப கூடாது. போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.