.jpeg)
மலைய மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை தற்போது மறந்துள்ளது. அதனால் மலையக தோட்டத் தொழிலாளர்களின் காணிப் பிரச்சினைக்கு உரிய முறையில் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6) இடம்பெற்ற மீட்பு, புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்கவகையின்மை (கூட்டிணைப்பு மற்றும் தனிப்பட்ட) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
அரசாங்கம் மலையக மக்களுக்கு வேண்டியளவுக்கு வாக்குறுதிகளை வழங்குகின்றது. இந்நிலையில் இரத்தினபுரி மாவட்டத்தில் தோட்டமொன்றில் காணி, இருப்பிடம் இல்லாத மலையக பிரஜையொருவர் சிறிய கூடாரமொன்றை அமைத்தார் என்பதற்காக அந்த தோட்டத்தின் பாதுகாவலர்கள் அவரை அங்கிருந்து விரட்டியடித்து, அந்த கூடாரத்தை அகற்றியுள்ளனர்.
லயன் அறைகளில் வாழ்க்கை நடத்தும் மலையக மக்கள் நாட்டுக்கு தேவையான அந்நிய செலாவணியை கொண்டுவருவதற்கு பெரும் அர்ப்பணிப்பை செய்கின்றனர். அவர்களுக்கு நீங்கள் வழங்கிய வாக்குறுதிகள், அவர்களுடனான சமூக உடன்படிக்கைகள் உங்களுக்கு மறந்துள்ளது. ஆனால் எமது அரசாங்கத்தில் மலையக மக்கள் உள்ளிட்ட வளங்கள் இன்றி இருக்கும் இளைஞர்களுக்கு தரிசு காணியில் அபிவிருத்தியுடன் சிறிய தேயிலை தோட்டங்களின் உரிமையாளர்களாக சமூகத்தில் வாழக்கூடிய வாய்ப்பை வழங்க எதிர்பார்க்கின்றோம்.
இதனால் வீடு இல்லாத மக்கள் எங்காவது தோட்டத்தில் கூடாரத்தை அமைப்பதை கரிசனையுடன் சிந்தித்து அவர்களின் காணி பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி, அந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது மனிதாபிமான அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை என்பதனை நினைவுபடுத்துகின்றோம்.
அதேவேளை, தற்போதைய அரசாங்கம் எவ்வேளையிலும் தமது பலவீனம், கவனயீனம் மற்றும் முடியாமை காரணமாக ஏதேனும் தவறு நடந்தால் அதன் பொறுப்பை ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் சிறிய நல்லது நடந்தால் அதற்கான பொறுப்பையும் கௌரவத்தையும் ஏற்றுக்கொள்ளும். இந்நிலையில் ஏதாவது தவறு நடந்தால் அதன் பொறுப்பை அதிகாரிகள் மீது சுமத்திவிடும்.
அத்துடன் எமது நாட்டின் அரச சேவையானது பெலவத்தை முறைமைக்குள் தள்ளப்பட்டுள்ளது. தமக்கு ஆதரவானவர்களை நியமித்துக்கொண்டு, அவர்களின் தகுதிகள் தொடர்பில் ஆராயாமல் நியமனங்களை வழங்குவதால் நிர்வாகத்துறையில் பெரும் வீழ்ச்சி ஏற்படுகின்றது. 2025 நவம்பர் 14ஆம் திகதியளவில் 2.5 மில்லியன் டொலர் தொடர்பில் 4 கொடுப்பனவுகள் செய்யப்பட்டுள்ளன. வருட இறுதி கணக்குகளை பேணுவதை முறையாக செய்திருந்தால் இதன் குறைபாடுகளை கண்டுபிடித்திருக்கலாம். ஆனால் அரசியல் மயப்படுத்தப்பட்டவர்கள் இந்த அரச சேவைக்குள் புகுத்தப்பட்டுள்ளதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டுக்கு தேவையான வளங்களை இழக்கும் நிலைமை உருவாகியுள்ளது.
இந்த பொறிமுறை வீழ்ச்சியில் அரச துறையில் தமக்கு சார்பான, தமக்கு தேவையானவர்களை நியமிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். எந்த காரணத்திற்காகவும் அரசியல் சவால்களுக்கு அரச சேவையாளர்கள் அடிபணியக்கூடாது. எங்களுக்கு அரச சேவையாளர்களின் உயிர்கள் முக்கியமாகும். தூய்மையான அரச சேவையை பாதுகாக்க நாங்கள் முன்னிற்போம் என்பதனை கூறிக்கொள்கின்றோம் என்றார்.











.jpg)
