மட்டக்களப்பில் அனைத்து இனங்களும் இணைந்து மே தினம் வரலாற்று மைல்கல் - அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி


தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி இன்று வெள்ளிக்கிழமை (01) மட்டக்களப்பில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. கல்லடிப் பாலத்திலிருந்து காந்தி பூங்கா வரை நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு, இனவாதம் மற்றும் மதவாதத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தரும் அமைச்சருமான சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்ததாவது,

தேசிய மக்கள் சக்தி இன்று வடக்கு, கிழக்கு, தெற்கு என நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மே தினத்தைக் கொண்டாடுகின்றது.

மட்டக்களப்பு வரலாற்றில் முதன்முறையாகத் தமிழ், சிங்கள, முஸ்லிம் மற்றும் பறங்கியர் என அனைத்து இன மக்களும் இணைந்து நகரின் மையப்பகுதியில் இந்த மே தினத்தைக் கொண்டாடுவது ஒரு முக்கியமான மைல்கல்லாகும். இது வெறும் தொழிலாளர் தினம் மட்டுமல்ல, மதவாதத்திற்கும் இனவாதத்திற்கும் எதிராக நாம் முன்னெடுக்கும் போராட்ட நாளாகும்.

"2024-ஆம் ஆண்டு நாம் நாட்டைப் பொறுப்பேற்றபோது, நாடு பாரிய கடன் சுமையிலிருந்தது. எரிபொருளுக்காக மக்கள் வரிசையில் காத்திருந்தனர்; விவசாயிகளுக்குப் பசளை இருக்கவில்லை; அரச ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு இல்லை; மலையகத் தொழிலாளர்கள் போதிய வருமானமின்றித் தவித்தனர். இவ்வாறான இக்கட்டான சூழலில்தான் இந்த நாடு எம்மிடம் கிடைத்தது.

அப்போது எதிர்க்கட்சியினர், 'தேசிய மக்கள் சக்தியிடம் ஆட்சியைக் கொடுத்தால் 6 மாதங்களில் நாடு வீழ்ச்சியடையும், மக்கள் பட்டினியால் சாவார்கள்' எனக் கூறினர். ஆனால், அந்த நிலைமையை மக்கள் மாற்றியமைத்தனர். கடந்த 76 ஆண்டுகளாக நாட்டை ஆண்டவர்கள் மக்களை ஏமாற்றியதுடன், சட்டத்தையும் ஒழுங்கையும் சீர்குலைத்து அடக்குமுறை ஆட்சியை நடத்தினர்.

கடந்த காலத்தில் மட்டக்களப்பில் இரண்டு விதமான சட்டங்கள் இருந்தன. யுத்தத்தின் பின்னர் இங்கு 'பிள்ளையான் சட்டம்'தான் அமுலில் இருந்தது. விவசாயிகளிடம் கப்பம் வாங்கப்பட்டது, விளைநிலங்கள் அபகரிக்கப்பட்டன, வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகம் கைப்பற்றப்பட்டது. மக்கள் வாழ வேண்டுமா இல்லையா என்பதைக்கூட அவர்களே தீர்மானித்தனர்.

ஆனால், இன்று நாட்டில் இரண்டு சட்டங்கள் இல்லை. யாரும் மக்களைப் பயமுறுத்த முடியாது. அன்று பிரதான வீதிகள் முதல் அரச அதிபர் அலுவலகம் வரை சிலரின் ஆதிக்கமே இருந்தது. இன்று வடக்கு, கிழக்கு, தெற்கு என நாடு முழுவதும் ஒரே நீதியை நிலைநாட்டியிருக்கின்றோம்.

"எங்களுக்குப் பொருளாதாரத்தை வழிநடத்தத் தெரியாது என்று கூறியவர்களுக்குப் பதிலளிக்கும் வகையில், இன்று நாம் கடன்களை முறையாக மீளச் செலுத்தி நாட்டை முன்னோக்கி நகர்த்தி வருகின்றோம் என மேலும் தெரிவித்தார்.