சாட்சியாளர் பாதுகாப்பில் அரசு தோல்வியடைந்தால் பொறுப்பு ஏற்க வேண்டும் – முஜிபுர் ரஹ்மான்

 


மக்களின் பணத்தை மோசடி செய்ததாக குற்றசாட்டுடையவர்களையும் அது தொடர்பான சாட்சியாளர்களையும் பாதுகாக்காப்பது அரசாங்கத்தின் பொறுப்பு. அவர்களை பாதுகாக்க தவறினால் அரசாங்கமே அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதேநேரம் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பல சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றுக்கு சம்பந்தப்பட்டவர்களும் எதிர்காலத்தில் தற்கொலை செய்துகொள்வார்களோ என்ற கேள்வி எழுகிறது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

கடந்த ஒன்றரை வாரத்துக்குள் பாரிய இரண்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டுபேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. குறிப்பாக திறைசேரியின் 2.5மில்லியன் டொலர் தவறான வங்கி கணக்கிற்கு வைப்பிட்டதாக தெரிவித்து, அரசாங்கம் 4பேரை பணி நீக்கம் செய்திருந்தது. அவர்களில் ஒருவரேதற்போது உயிரிழந்துள்ளது. அடுத்தபடியாக எயார் பஸ் கொடுக்கல் வாக்கல் தொடர்பான பிரதான சாட்சியாளர் கபில சந்திரசேனவும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

இந்த சம்பவங்களை எங்களால் சாதாரண விடயமாக கருத முடியாது. ஏனெனில் மக்களின் பணத்தை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக்கு நாளாகி, அந்த சம்பவத்துக்கு சாட்சியாளர்களாகி இருப்பவர்கள், இவ்வாறு தற்கொலை செய்துகொள்வது என்பது பாரிய விடயமாகும். இந்த சம்பவங்களை அரசாங்கம் எந்தளவு பாரதூரமாக காண்கிறது என எங்களுக்கு தெரியாது. இவர்களை பாதுகாத்துக்கொள்ள முடியாது என்றால் இதுதொடர்பான வழக்கு விசாரணைகள் எதுவும் முன்னுக்கு செல்லாது, அதனால் சாட்சியாளர்களையும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருப்பவர்களையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு. அரசாங்கம் அவர்களை பாதுகாக்க தவறினால் அதன் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். சாட்சியாளர்களை பாதுகாக்க அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை.

அப்படியானால் எதிர்காலத்தில் நிலக்கரி மோசடி சம்பவம் தொடர்பில், நிதி அமைச்சில் இடம்பெற்ற சம்பவம். அதேபோன்று தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பல சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.அவற்றுக்கு சம்பந்தப்பட்டவர்களும் எதிர்காலத்தில் தற்கொலை செய்துகொள்வார்களோ என்ற கேள்வி எழுகிறது. அதனால் இவர்களையும் பாதுகாத்துக்கொள்ள ஏதாவது வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிவரும்.

அதேநேரம் நல்லாட்சி அரசாங்க காலத்தில் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் செய்யப்பட்ட முறைப்பாடுகளையே அரசாங்கம் தற்போது கொண்டுசெல்கிறது. ஆணைக்குழுக்களை சுயாதீன நிறுவனங்களாக பிரகடனப்படுத்தியது நல்லாட்சி அரசாங்கத்திலாகும். அதன் பிரகாரமே லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கும் சட்ட ரீதியிலான இந்த அதிகாரம் கிடைக்கப்பெற்றது. அதனால் சுயாதீன ஆணைக்குழுக்களின் நடவடிக்கைகளில் அரசியல் தலையீடுகளை மேற்கொள்ள வேண்டாம் என நாங்கள் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம்.

அரசாங்கத்தின் அமைச்சர்கள் பலருக்கு எதிராகவும் குறிப்பாக 323 கொள்கலன் விடுவிப்பு உள்ளிட்ட பல முறைப்பாடுகள் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அந்த முறைப்பாடுகள் எதுவும் இதுவரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. அது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளாமல் இருப்பதாலே அரசியல் தலையீடு இடம்பெறுவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது. அதனால் சுயாதீன நிறுவனம் என்றவகையில், லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு ஒன்று கிடைத்தால், அது அரச தரப்பா எதிர்த்தரப்பா என பார்க்காமல் அது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் பொறுப்பு லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு இருக்கிறது.