பாதாள உலகக் கும்பலின் நெருங்கிய சகா கைது!

வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளதாக நம்பப்படும் பிரபல பாதாள உலகக் கும்பலின் தலைவன் ஒருவனின் நெருங்கிய சகா, மினுவாங்கொடை - ஹினெட்டியான பகுதியில் வைத்துப் துப்பாக்கி ரவைகளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கெஹெல்பத்தர விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையின்போதே இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரிடமிருந்து T-56 ரக துப்பாக்கி ரவைகள் 54, T-56 ரக துப்பாக்கி மெகசின் 1 ஆகிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன:

கைது செய்யப்பட்டவர் மினுவாங்கொடை, ஹினெட்டியான பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையினரால் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்ட இவர், மேலதிக விசாரணைகளுக்காகக் கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணைகளில், கைப்பற்றப்பட்ட துப்பாக்கி ரவைகளும் மெகசினும் வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் ஒரு முக்கிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் நெருங்கிய சகாவினுடையது என்பது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்துக் கட்டுநாயக்க பொலிஸார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.