விவசாயி மகன் எனக் கூறிய ஜனாதிபதி, விவசாயிகளின் உரிமைகளை மீறுகிறார் - சஜித் குற்றச்சாட்டு


தேர்தல் காலத்தில் விவசாயியின் மகனை ஆட்சியில் அமர்த்துவோம் எனக் கூறி வாக்குச் சேகரித்துவிட்டு, தற்போது பாராளுமன்றத்தில் 159 பெரும்பான்மையைப் பெற்ற பின்னர் அரசாங்கம் நாட்டின் விவசாய சமூகத்தின் அடிப்படை மற்றும் மனித உரிமைகளை அப்பட்டமாக மீறி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

நாட்டின் பெரும்பான்மை மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விவசாயி நாட்டின் ராஜாவிற்குச் சமமானவர் என்ற வரலாற்று உண்மையை தற்போதைய அமைச்சர் அற்பத்தனமாக நிராகரித்து, விவசாயிகளைத் தொடர்ந்து பழித்துப் பேசி வருகின்றார்.

நாட்டுக்கு சோறு வழங்குவது விவசாயி அல்ல என்ற வாதத்தை முன்வைக்கும் இந்த அரசாங்கம், விவசாயிகளை சட்டவிரோத மதுபானம் தயாரிப்பவர்கள் என்றும், போலி விவசாயிகள் என்றும் இழிவுபடுத்துகிறது.

தேர்தல் முடியும் வரை விவசாயம் உன்னதமாகத் தெரிந்தது, ஆனால் அதிகாரத்தைப் பெற்ற பின்னர் விவசாய சமூகம் அரசாங்கத்திற்கு ஒரு பாரமாக மாறிவிட்டது.

தேர்தல் காலத்தில் நெல்லுக்கு 150 ரூபா விலை வழங்குவதாக உறுதியளித்துவிட்டு, தற்போது அதனை 120 ரூபாவாகக் குறைத்தும் வழங்க முடியாமல் அரசாங்கம் திணறுகிறது. இந்தத் தோல்வியை மறைக்கவே அரசாங்கம் விவசாயிகள் மீது அவதூறு பரப்புகிறது.

வாக்குறுதியளித்த விலையை வழங்க முடியாவிட்டால், உடனடியாக அமைச்சுப் பதவிகளையும் அரசாங்கத்தையும் துறந்து வெளியேற வேண்டும்.

கடந்த காலத்தில் கனிம உர நாடகத்தால் விவசாயம் அழிக்கப்பட்டதைப் போல, தற்போதைய அரசாங்கமும் அதிகாரத்துக்காக விவசாயிகளைப் பயன்படுத்திவிட்டு இப்போது கைவிட்டுள்ளது.

எனினும், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கமொன்றில் நெல்லுக்கு நிலையான விலை, தரமான உரம், விதைகள், கிருமிநாசினிகள் மற்றும் உர மானியம் என்பன தடையின்றி வழங்கப்படும்.

மனித-யானை மோதல்களுக்குத் தீர்வு கண்டு விவசாயிகளின் கௌரவமும் உரிமைகளும் முழுமையாகப் பாதுகாக்கப்படும் என்றார்.