அந்த வகையில், சுகாதார அமைச்சினால் 432 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய இருதயவியல் சிகிச்சைப் பிரிவு மற்றும் நோயாளர் விடுதியின் திறப்பு விழா இன்று (17) நண்பகல் வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றது.
வைத்தியசாலையின் திட்டமிடல் குழுவின் ஏற்பாட்டில், வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் ஆர். முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வைத்தியசாலையின் சிரேஷ்ட இதய நோயியல் நிபுணர் டாக்டர் அருள்நிதி, பிரதிப் பணிப்பாளர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது, புதிய இருதயவியல் சிகிச்சைப் பிரிவு மற்றும் நோயாளர் விடுதி உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனி பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ள இந்த விடுதியில், நவீன மருத்துவ உபகரணங்களுடன் நோயாளர்களுக்கு சிகிச்சை மற்றும் பராமரிப்பு சேவைகளை வழங்குவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இதய நோயாளர்களுக்கான தனியான சிகிச்சைப் பிரிவு மற்றும் விடுதி அமைக்கப்படுவது நீண்டகால தேவையாக இருந்து வந்த நிலையில், புதிய பிரிவு திறக்கப்பட்டுள்ளமை நோயாளர்களுக்கு சிறந்த சிகிச்சை சேவைகளை வழங்குவதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
இருதயவியல் சிகிச்சைப் பிரிவை அமைப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து, அதன் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய வைத்தியசாலையின் சிரேஷ்ட இதய நோயியல் நிபுணர் டாக்டர் அருள்நிதி, வைத்தியசாலைப் பணிப்பாளர் மற்றும் சமூகத்தின் சார்பில் இந்நிகழ்வின்போது கௌரவிக்கப்பட்டார்.
புதிய இருதயவியல் சிகிச்சைப் பிரிவு திறக்கப்பட்டதன் மூலம் மட்டக்களப்பு உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இதய நோயாளர்களுக்கு நவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய தரமான சிகிச்சை சேவைகளை வழங்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


.jpeg)
