நீதிமன்ற சாட்சியங்களை பதிவு செய்ய புதிய செயலி


நீதிமன்ற நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதங்களை குறைக்கும் நோக்கில், திறந்த நீதிமன்ற விசாரணைகளின்போது சாட்சியங்களை பதிவு செய்வதற்காக புதிய செயலியொன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

குறித்த செயலி குரல் மூலம் தட்டச்சு செய்யும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நீதிமன்றத்தில் வழங்கப்படும் சாட்சியங்களை எழுத்து வடிவில் துல்லியமாக பதிவு செய்யும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.

மேலும், ஒவ்வொரு சாட்சியின் குரலையும் தனித்தனியாக அடையாளம் காணும் வகையில் செயலி வடிவமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சாட்சிகள் மீண்டும் சாட்சியம் அளிக்கும்போது ஏற்படக்கூடிய குழப்பங்களை தவிர்க்க முடியும்.

வழக்கு அறிக்கைகள் மற்றும் சட்ட குறிப்புகளைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்கள் காரணமாக நீதிமன்ற வழக்குகள் ஒத்திவைக்கப்படும் நிலை காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாமதங்களை குறைத்து நீதிமன்ற நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் நோக்கில் நீதவான் நீதிமன்றங்கள் மற்றும் மேல் நீதிமன்றங்களில் இந்த செயலியை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீதிமன்ற நடவடிக்கைகளின் செயல்திறனை மேம்படுத்த முடியும் என்றார்.