SLS சான்றிதழ் இல்லாத தலைக்கவசங்கள் விற்பனை – இருவருக்கு அபராதம் ; 42 தலைக்கவசங்கள் அழிக்க நீதிமன்றம் உத்தரவு


SLS 517 தரச்சான்று இல்லாத பாதுகாப்பு தலைக்கவசங்களை விற்பனை செய்த கடையொன்றுக்கும், அவற்றை விநியோகித்த விநியோகஸ்தருக்கும் எதிராக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை (CAA) சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.

கம்பஹா மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகள் கடந்த ஜூலை 28 அன்று மேற்கொண்ட திடீர் சோதனையில், 42 தரச்சான்று இல்லாத தலைக்கவசங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு மஹர நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து, இருவருக்கும் தலா ரூ.5,000 வீதம், மொத்தம் ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டதுடன், பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து தலைக்கவசங்களையும் உடனடியாக அழிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

SLS தரச்சான்று இல்லாத தலைக்கவசங்களை விற்பனை செய்யும் அல்லது விநியோகிக்கும் வர்த்தகர்கள் குறித்து 1977 என்ற அவசர இலக்கத்திற்கு தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை கோரிக்கை விடுத்துள்ளது.