இலங்கையின் ஒட்டுமொத்த சுகாதாரச் சேவையும் சரியும் அபாயம் – GMOA எச்சரிக்கை


சுகாதாரச் சேவையின் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களின் வெற்றிடங்களின் எண்ணிக்கை 2015ஆம் ஆண்டிற்குப் பின்னர் இதுவரை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முழுமையாகத் திருத்தப்படவில்லை என்பதால், ஒட்டுமொத்த சுகாதாரச் சேவையும் சரிந்து விழும் அபாயகரமான நிலையை எட்டியுள்ளதாக அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) கடுமையாக வலியுறுத்தியுள்ளது.

தசாப்த கணக்கில் குறைந்த செலவில் உயர் செயல்திறனைக் காட்டி சர்வதேசத்தின் பாராட்டைப் பெற்ற இலங்கையின் சுகாதாரச் சேவை, தற்போதைய நிர்வாக மற்றும் கொள்கை ரீதியான பிரச்சினைகளுக்கு மத்தியில் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு அச்சங்கம் தெரிவித்துள்ளது.

சாதாரணமாகச் சுகாதாரப் பணியாளர்களை சரியான தரம் மற்றும் எண்ணிக்கையில் பேணுவதற்கு ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை அமைச்சினால் பணியாளர் வெற்றிடங்கள் திருத்தப்பட வேண்டும் என்றபோதிலும், நாடு முழுவதையும் உள்ளடக்கிய வகையில் முழுமையான மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கடைசிப் பணியாளர் திருத்தம் 2015ஆம் ஆண்டிலேயே பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், கடந்த தசாப்தத்தில் வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை, மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகள் மற்றும் ஏனைய வைத்திய நடைமுறைகள் அத்துடன் பரிசோதனைகளின் அளவும் பெருமளவில் அதிகரித்துள்ளதாக அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுதவிர, புதிய வைத்தியசாலைகள் மற்றும் சுகாதாரச் சேவை பிரிவுகளை நிறுவுதல், சிகிச்சை சேவைகளின் சிக்கலான தன்மை மற்றும் புதிய தொழில்நுட்ப முறைகளின் பயன்பாடு அதிகரிப்பு என்பன 2015ஆம் ஆண்டில் நிலவிய பழைய அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் வரம்புகளின் அடிப்படையிலேயே இடம்பெற்றுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, சேவைகள் மேலும் விரிவடைவதோடு வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்களைப் புதிதாக இணைத்துக்கொள்ளும் செயற்திட்டத்திற்கு கடும் தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், குறிப்பாகக் கடந்த பொருளாதார நெருக்கடி காலத்தில் கணிசமான எண்ணிக்கையிலான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியதால் சுகாதாரச் சேவைக்கு ஆயிரக்கணக்கான வைத்தியர்கள் இல்லாமல் போயுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலைமை தொடர்பாக அரசு வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் சுகாதார அமைச்சுடன் தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டபோதிலும், இதுவரை எவ்வித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை என அச்சங்கம் குறிப்பிடுகிறது.

உலக சுகாதார அமைப்பினால் சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்வதற்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவியல் முறைகள் காணப்படுகின்ற போதிலும், இலங்கையின் சுகாதார அமைச்சு அத்தகைய சரியான முறையைப் பின்பற்றுவதாகத் தெரியவில்லை என்றும், இது தொடர்பில் இரு வாரங்களுக்கு முன்னர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் வினவியபோதிலும் இதுவரை எவ்வித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை என்றும் அச்சங்கம் சுட்டிக்காட்டுகிறது.

தற்போதைய அரசாங்கத்தினால் முன்மொழியப்படும் சுகாதாரச் சேவையின் மறுசீரமைப்புகள் மற்றும் புதிய திட்டங்களை வெற்றிகரமாக்க வேண்டுமாயின் பயிற்சி பெற்ற பணியாளர்களின் தேவை அவசியமானது என்பதால், உடனடியாகச் சுகாதாரப் பணியாளர் வெற்றிடங்களைத் திருத்தியமைக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்வதாக அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.