பொலிஸார் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மோசடிக்காரர்கள் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கோ அல்லது சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கோ இணக்கம் தெரிவித்து, பணம் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகக் கூறி போலியான பணப்பரிமாற்ற பற்றுச்சீட்டுகளை WhatsApp அல்லது Messenger ஊடாக அனுப்புகின்றனர்.
இவ்வாறு அனுப்பப்படும் போலியான பற்றுச்சீட்டுகளில் வங்கிக் கணக்கு இலக்கம், பணப்பரிமாற்ற நேரம், பெயர் மற்றும் பணத்தொகை உள்ளிட்ட விபரங்கள் உண்மையானவை போன்று துல்லியமாகக் காணப்படலாம் என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனையடுத்து, பணம் உண்மையில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவதற்கு முன்னரே பொருட்களை ஒப்படைக்குமாறோ அல்லது சேவைகளை வழங்குமாறோ மோசடிக்காரர்கள் வர்த்தகர்களுக்கு அழுத்தம் கொடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, WhatsApp அல்லது Messenger ஊடாக அனுப்பப்படும் பணப்பரிமாற்ற பற்றுச்சீட்டுகளை மாத்திரம் நம்பி பொருட்களையோ சேவைகளையோ வழங்க வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
பணம் தமது வங்கிக் கணக்கில் உண்மையாகவே வரவு வைக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திய பின்னரே பொருட்களை ஒப்படைக்குமாறும் சேவைகளை வழங்குமாறும் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.



