அரசாங்கத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் சிவில் சமூகத்தினரை அச்சுறுத்தவே புதிய சட்டங்கள் – மிலிந்த ராஜபக்‌ஷ குற்றச்சாட்டு!



அரசாங்கம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான புதிய சட்டங்களை கொண்டு வர எத்தனிப்பது அரசியல்வாதிகளுக்கு எதிரான பழிவாங்கல்களுக்கு மட்டுமன்றி, அரசாங்கத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் சிவில் சமூகத்தினரை பயமுறுத்தி தமக்கு அடிப்பணி செய்யவே என பவுஜன பலய அமைப்பின் ஊடகப் பிரதிநிதி மிலிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (02) நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

முன்மொழியப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான புதிய சட்டமூலத்தின் ஊடாக, வேறுபாடுகளின்றி நடுநிலையாக ஆதாரங்களை முன்வைத்து விமர்சனம் செய்யும் சிறந்த எழுத்தாளர் நிலந்த சஸ்சர கமகே என்பவர் முதலாவது பலிக்கடா ஆக்கபட்டுள்ளார்.

குறிப்பாக இவர் பௌத்த மதம் மற்றும் கலாசார பாரம்பரியம் உட்பட நாட்டின் சகல விடயங்களையும் எழுதக்கூடியவர். இவர் குறித்த போலியான தகவல் அமைச்சரவை அமைச்சர் ஒருவரால் செய்தித்துறைப் பணிப்பாளருக்குக் கடிதம் ஊடாக அனுப்பப்பட்டுள்ளது.

இத்தகைய பழிவாங்கலானது இடம்பெற பிரதான காரணம் என்னவெனில் குறித்த அமைச்சரினால் மதவாதம் மற்றும் பிரிவினைவாதம் தொடர்பிலான விஷம கருத்துக்கள் பரப்பப்பட்டு சமூகம் பிளவுபடுவதை நிலந்த என்னும் எழுத்தாளர் வெளிச்சம் போட்டுக் காட்டியமையே ஆகும். இவ்வாறான போலி செய்திகளை பரப்பி மக்களை பழிவாங்குவது அரசாங்கத்துக்கு வழக்கமாகி விட்டது.

மேலும் செய்தித் துறை திணைக்களத்துக்கு காணப்படும் அதிகாரம் என்னவென்று முதலில் தெளிவுப்படுத்த வேண்டிய நிலை எற்பட்டுள்ளது. கருத்து தெரிவித்தாலே எதிர்ப்புத் தெரிவிப்பார்களாக இருந்தால் இவ்வரசாங்கம் 2029 காணாமல் போய்விடும். அதுமட்டுமன்றி செய்தித் துறையானது அரசாங்கத்தின் கட்டளைகளுக்கு அடிப்பணியாது நாட்டு மக்களுக்காக செயற்பட வேண்டும்.

மேலும் முன்மொழியப்பட்டுள்ள சட்ட மூலங்கள் நடைமுறைக்கு வந்தால், தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் என்பன முற்றிலுமாக தடைச் செய்யக்கூடிய நிலை ஏற்பட்டுயள்ளது.

அதுமட்டுமன்றி முகநூலிலோ அல்லது யூடியூபிலோ கருத்துத் தெரிவிப்பது அல்லது மூவருக்கு மேற்பட்டோர் கூடிப் பேசி அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்துப் பகிர்வதற்குக் கூட தடை என்ற நிலை உருவாகி இலங்கை ஒரு வட கொரியாவைப் போன்று மாற்றமுற அபாயம் உள்ளது.

கடந்த எழுபது ஆண்டு கால வரலாற்றில் ஜே.வி.பி அமைப்பினரும் தற்போதைய ஆட்சியாளர்களும் நடத்திய போராட்டங்களும் வேலைநிறுத்தங்களுமே நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்தன என்பதை அவர்கள் அறிவர், ஆகையால் தான், எதிர்காலத்தில் தமக்கு எதிராக எவரும் கிளர்ந்தெழுந்துவிடக் கூடாது என்பதற்காகவே பொலிஸாரையும் அநீதியான சட்டத் திருத்தங்களையும் கொண்டு வந்து மக்களின் குரலினை ஆரம்பத்திலேயே அடங்க முயற்சிகின்றனர்.

இத்தகைய மக்களின் கருத்துரிமையையும் ஜனநாயகத்தின் உயிர்ப்பையும் பறிக்கும் அரசாங்கத்தின் சர்வாதிகாரச் செயல்களுக்கு எதிராக நாம் இறுதிமூச்சு உள்ளவரை எமது குரலைத் தொடர்ந்து உயர்த்துவோம் என்றார்.