கிழக்குப் பல்கலைக்கழகத்திடம் உடையார் வீதியை விடுவிக்கக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!



மட்டக்களப்பு வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழகம் தமது கிராமத்திற்கு செல்லும் 'உடையார் வீதியை' விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதி மக்களும் பொது அமைப்புகளும் இணைந்து கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்னால் வியாழக்கிழமை (12) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

கொம்மாதுறை தீவு பகுதி பிரதான வீதி வழியாக பேரணியாக வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வந்தாறுமூலை பிரதான வழியாக சென்று - வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்குப் பல்கலைக்கழகம் எனது வீதியை விடுவித்து தா - என்று பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு பேரணியில் ஈடுபட்டனர்.

கடந்த 1990ஆம் ஆண்டு யுத்த காலப்பகுதியில் தமது கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதி மூடப்பட்டதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் கிழக்குப் பல்கலைக்கழகம் சுற்றுமதில் அமைத்ததால் தங்கள் கிராமத்திற்கான வீதி முற்றிலும் தடைப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட மக்கள் தமக்கான வீதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கோரி இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

சுமார் ஒரு மணி நேரம் பல்கலைக்கழகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர். தமது கோரிக்கை அடங்கிய மகஜரை பல்கலைக்கழக நிர்வாகத்திடம் வழங்க சென்ற போது ஆர்பாட்டக்காரர்களுக்கு பல்கலைக்கழகத்தினுள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதே வேளை பல்கலைக்கழக நிர்வாகம் ஆர்பாட்டக்காரர்களது மகஜரை பிரதான நுளைவாயிலின் காவலாளியிடம் ஒப்படைக்க் தெரிவித்ததையடுத்து - ஆர்பாட்டக்காரர்கள் மகஜரை காவலாளியிடம் ஒப்படைத்து கலைந்து சென்றனர்.