தமிழர் காணிகளை அபகரிக்க பொத்துவில் பிரதேசத்திலும் முயற்சி!

அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேசத்துக்குட்பட்ட ஊறணிப் பிரதேசத்தில் மக்கள் குடியிருக்கும் காணிகளுக்கு உரிமை கோரி பொலிஸ் பாதுகாப்புடன் சிங்களவர் ஒருவர் நிலஅளவை செய்ய மேற்கொண்ட முயற்சி பிரதேச மக்களின் எதிர்ப்பையடுத்து கைவிடப்பட்டது.
ஊறணி, கனகர் கிராமத்தில் 250க்கு மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 45 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகின்றன.
இக்குடியிருப்பு பிரதேசத்தில் கொழும்பை சேர்ந்த சிங்களவர் ஓருவர் தனக்கு இப்பகுதியில் 59 ஏக்கர் நிலப்பரப்புக்கான ஆவணம் உள்ளது எனக் கூறி நிலஅளவை செய்வதற்கு பொத்துவிலுக்கு ஆளும் கட்சியைச் சேர்ந்த சிங்கள அரசியல்வாதி ஒருவரின் ஒத்துழைப்புடன் வந்துள்ளதாக பிரதேச மக்களுக்கு தெரியவந்ததையடுத்து மக்கள் மத்தியில் பதற்றமான நிலை ஏற்பட்டது
இதனையடுத்து பொதுமக்கள் இன்று காலை ஒன்றுதிரண்டு வீதியில் நின்றனர். மக்களை வீடுகளுக்கு செல்லுமாறு பொலிஸார் பணித்தபோதும் மக்கள் அங்கிருந்து பகல் ஒரு மணிவரையும் நகரவில்லை. இதனையடுத்து பொலிஸார் திரும்பிச் சென்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் ம.துரைரத்தினம் தெரிவித்தார்.
கடந்த 1965ஆம் ஆண்டு மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினத்தின் பெயரில் கனகர் கிரமம் உருவாக்கப்பட்டு காணி ஆவணங்கள் வழங்கப்பட்டு குடியேற்றப்பட்டனர்.
இக்கிராமத்தின் தமிழர் குடியிருப்பு நிலங்களை அபகரித்து உல்லாச விடுதிகள் கட்டுவதற்காக அரசியல்வாதிகளின் ஒத்தாசையுடன் அடிக்கடி இப்பிரதேச மக்களை அச்சுறுத்தி வருவதாக அங்குள்ள மக்கள் குற்றம் சுமத்துவதாக அவர் தெரிவித்தார்.